ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடிய 10 பேருக்கு ஜாமீன்: கதிராமங்கலத்துக்கு வந்த 7 பேருக்கு சிறப்பான வரவேற்பு


ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடிய 10 பேருக்கு ஜாமீன்: கதிராமங்கலத்துக்கு வந்த 7 பேருக்கு சிறப்பான வரவேற்பு
x
தினத்தந்தி 13 Aug 2017 4:00 AM IST (Updated: 13 Aug 2017 2:06 AM IST)
t-max-icont-min-icon

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடிய 10 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து கதிராமங்கலத்துக்கு வந்த 7 பேருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருவாலங்காடு,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறுகளை அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் தடியடி நடத்தினர்.

மேலும் மீத்தேன் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். பேராசிரியர் ஜெயராமன் கைது செய்யபட்டதை கண்டித்தும் கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறக்கோரியும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் கைது செய்யப்பட்ட 10 பேரும் நேற்று நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இதில் பேராசிரியர் ஜெயராமன், விடுதலைச்சுடர் ஆகிய இருவரும் மயிலாடுதுறைக்கு சென்றனர். சந்தோஷ் தனது சொந்த ஊரான திருமாந்துறைக்கு சென்றார். தர்மராஜன், ரமேஷ், சிலம்பரசன், சாமிநாதன், வெங்கட்ராமன், முருகன், செந்தில்குமார் ஆகிய 7 பேரும் கதிராமங்கலத்துக்கு வந்தனர். இவர்களுக்கு திருக்கோடிக்காவல் ஊர் எல்லையில் இருந்து கதிராமங்கலம் மக்கள் பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அங்கிருந்து கதிராமங்கலம் வரை இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர்.

தர்மராஜன், ரமேஷ், சிலம்பரசன், சாமிநாதன், வெங்கட்ராமன், முருகன், செந்தில்குமார் ஆகிய 7 பேருக்கும் கதிராமங்கலம் கடைவீதியில் கிராம மக்கள் பூ மாலை, சந்தனமாலை அணிவித்து ஆரத்தி எடுத்து திலகமிட்டனர். அப்போது அவர்களை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். நீண்ட நாட்களாக தங்கள் தந்தையை பார்க்காமல் இருந்த அவர்களின் குழந்தைகள் தந்தையை பார்த்த மகிழ்ச்சியில் அவர்களின் தோள் மீது ஏறி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் அய்யனார் கோவில் தோப்பில் ஜாமீனில் விடுதலையான 7 பேரையும் தனி மேடையில் ஏற்றி மக்கள் பச்சை துண்டு அணிவித்தனர். இவர்களின் ஜாமீனுக்கு உறுதுணையாக இருந்த வக்கீல்களும் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து மக்கள் தங்களின் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது அவர்கள், கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் முற்றிலுமாக வெளியேறும் வரை போராட்டம் தொடரும் என கூறி விறகு அடுப்பில் சமைத்து சாப்பிட்டனர். 

Related Tags :
Next Story