காலியாக உள்ள 2,516 அங்கன்வாடி பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


காலியாக உள்ள 2,516 அங்கன்வாடி பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 14 Aug 2017 4:45 AM IST (Updated: 14 Aug 2017 4:44 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 516 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

வேலூர்,

இதுகுறித்து கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் தற்போது காலியாக உள்ள 1,268 அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடங்களும், 38 குறு மைய அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடங்களும் மற்றும் 1,210 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தகுதி வாய்ந்த பெண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குறுமைய அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் எஸ்.எஸ்.எல்.சி. தேறியவராகவும், 1.7.2017 அன்று 25 வயது முதல் 35 வயது வரை உள்ளவராகவும் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 38 வயது வரை தளர்வு அளிக்கப்படும். விதவை, கணவரால் கைவிடப்பட்டவர் மற்றும் மலைப்பகுதியில் வசிப்பவர்களுக்கு 40 வயது வரை தளர்வு வழங்கப்படும். மலைப்பகுதியில் வசிப்பவர்களுக்கு குறைந்தபட்ச வயது 20 ஆகும். மேலும் குறைந்த பட்ச கல்வி தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி ஆகும்.

காலிப்பணியிட மையங்கள் குறித்த பட்டியல் ஒதுக்கீடு செய்யப்பட்ட வகுப்பு பணிநியமன விதிமுறைகள், மாதிரி விண்ணப்ப படிவம், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய அலுவலகம் போன்ற விவரங்கள் வேலூர் மாவட்ட இணையதளமான www.vellore.tn.nic.in –ல் வெளியிடப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரரிடம் வசிப்பிட ஆதாரமாக கீழ்கண்ட ஏதேனும் ஒரு சான்று கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டை, வீட்டு வரி ரசீது (விண்ணப்பதாரர் பெயரில் இருக்க வேண்டும்) குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களில் கை, கால் ஊனம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 2014–ல் பெறப்பட்ட விண்ணப்பங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் தற்போது மீண்டும் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இப்பணி நியமனத்திற்கெனப் பிரத்தியேகமான விண்ணப்பப் படிவம் வேலூர் மாவட்ட இணைய தளத்திலும் சம்பந்தப்பட்ட வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலக விளம்பர பலகையில் வைக்கப்பட்டுள்ள மாதிரி படிவத்தில் உள்ளவாறு விண்ணப்பங்களை தயார் செய்து அதில் விவரங்களை பூர்த்தி செய்து பிறந்த தேதி, கல்வித்தகுதி, சாதிச்சான்று போன்ற சான்றுகளில் நகல்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை 30.8.2017 அன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story