புதுவை–ஐதராபாத் விமான சேவை முதல்–அமைச்சர் நாராயணசாமி இன்று தொடங்கி வைக்கிறார்


புதுவை–ஐதராபாத் விமான சேவை முதல்–அமைச்சர் நாராயணசாமி இன்று தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 16 Aug 2017 4:45 AM IST (Updated: 16 Aug 2017 4:36 AM IST)
t-max-icont-min-icon

புதுவை–ஐதராபாத் விமான சேவையை முதல்–அமைச்சர் நாராயணசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

புதுச்சேரி,

புதுவையில் இருந்து கடந்த 2014–ம் ஆண்டு பெங்களூருக்கு விமான சேவை தொடங்கப்பட்டது. ஆனால் அந்த சேவை பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் புதுவையில் காங்கிரஸ்–தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்–அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் டெல்லி சென்று மத்திய மந்திரிகளை சந்தித்து புதுவையில் இருந்து விமான சேவை தொடங்க வலியுறுத்தி வந்தனர். அதன் பின்னர் மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுத்தன.

இந்த நிலையில் தற்போது புதுவையில் இருந்து ஐதராபாத்திற்கு விமான சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து லாஸ்பேட்டை விமான நிலையத்தில் விமான போக்குவரத்திற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த நிலையில் விமான சேவையின் தொடக்க விழா இன்று(புதன்கிழமை) காலை லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலையத்தில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு விமான சேவையை தொடங்கி வைக்க உள்ளார். நிகழ்ச்சியில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.பி.க்கள் ராதாகிருஷ்ணன், கோகுலகிருஷ்ணன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

ஆனால் மத்திய மந்திரிகளோ, கவர்னரோ கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பான அரசு அழைப்பிதழில் அவர்களின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story