நுகர்வோர் வாங்கும் பொருட்கள் தரமற்றதாக இருந்தால் உரிய இழப்பீடு பெற முடியும்


நுகர்வோர் வாங்கும் பொருட்கள் தரமற்றதாக இருந்தால் உரிய இழப்பீடு பெற முடியும்
x
தினத்தந்தி 31 Aug 2017 5:00 AM IST (Updated: 31 Aug 2017 1:06 AM IST)
t-max-icont-min-icon

aநுகர்வோர் வாங்கும் பொருட்கள் தரமற்றதாக இருந்தால் உரிய இழப்பீடு பெற முடியும் என கலெக்டர் சிவஞானம் கூறினார்.

விருதுநகர்,

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் உலக நுகர்வோர் உரிமை தின விழா கலெக்டர் சிவஞானம் தலைமையில் சிவகாசியில் நடைபெற்றது. விழாவில் கலெக்டர் சிவஞானம் பேசும்போது கூறியதாவது:–

நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த விழா நடக்கிறது. இந்த நவீன யுகத்தில் நாம் அனைவரும் பல்வேறு பொருட்களை சார்ந்து வாழ வேண்டிய சூழ்நிலை உள்ளது. நுகர்வோர் உரிமை தின விழாவின் நோக்கமானது, நுகர்வோர்களுக்கு பாதுகாப்பு உரிமை, தகவல் பெறும் உரிமை, தேர்ந்தெடுக்கும் உரிமை, முறையிடும் உரிமை, குறைதீர்க்கும் உரிமை, நுகர்வோர் கல்விக்கான உரிமை, தூய்மையான நலம் பயக்கும் சுற்றுச்சூழலுக்கான உரிமை, அடிப்படை தேவைகளுக்கான உரிமைகளை தெரிந்து கொள்வதே. இதன் மூலம் உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருட்கள் உற்பத்தி செய்யும் முறைகள் மற்றும் சேவைகளிலிருந்து பாதுகாத்து கொள்ளவும், தனக்குத் தேவையான பொருட்களை சுதந்திரமாக தேர்ந்தெடுத்து கொள்ளவும், தரமற்ற பொருட்கள் சேவைகள் காரணமாக ஏற்படும் இழப்புகளுக்கு உரிய நஷ்டஈடு பெறவும் வழிவகை செய்கிறது.

பொருட்களை தேர்வு செய்யும்போது, பொருட்களின் விலை, உற்பத்தி செய்யப்பட்ட தேதி மற்றும் காலாவதியாகும் தேதி, தரத்தை உறுதிப்படுத்தும் முத்திரைகளான அக்மார்க் தரம் உள்ளனவா எனவும், வாங்கப்பட்ட பொருட்களுக்கான ரசீதுகளில் விற்பனையாளரின் முத்திரை மற்றும் கையொப்பம் இட்டு வாங்க வேண்டும். இதன் மூலம் வாங்கும் பொருட்கள் தரமற்றவையாக இருக்கும்போது அவற்றிற்குரிய இழப்பீடு பெற முடியும். மேலும் நுகர்வோருக்கு மருத்துவ சேவை, சிகிச்சை மற்றும் மருந்துகள் உள்பட பொது வினியோக திட்டத்தின் கீழ் பெறும் பொருட்கள், பொழுதுபோக்கு அம்சம் நிறைந்துள்ள பூங்கா, திரையரங்கு முதலியவற்றில் சேவை குறைபாடுகள் இருப்பின் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story