சென்னையில் இந்து முன்னணி சார்பில் இன்று விநாயகர் சிலைகள் கரைப்பு

சென்னையில் இன்று (வியாழக்கிழமை) இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடக்கிறது. இதையொட்டி பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர்.
சென்னை,
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 25-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை நகர தெருக்களில் இந்து முன்னணி உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
இந்து முன்னணி சார்பில் சென்னை நகரில் 1,500-க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று (வியாழக்கிழமை) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன.
விநாயகர் சிலைகள் ஊர்வலம், நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் இருந்தும், திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன் பேட்டையில் இருந்தும் பிற்பகல் 1.21 மணிக்கும், அரசு பொது மருத்துவமனை அருகே உள்ள முத்துசாமி பாலம் சந்திப்பில் இருந்து பிற்பகல் 2.01 மணிக்கும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் கரைப்பு
இந்து முன்னணி தவிர, இந்து மக்கள் கட்சி, விஷ்வ ஹிந்து பரிஷத், சிவசேனா உள்ளிட்ட மேலும் 10 அமைப்புகள் சார்பிலும் விநாயகர் சிலைகள் ஊர்வலம் இன்று காலையில் நடக்கிறது. ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் சிலைகள் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடலில் கரைக்கப்படுகிறது.
இதுபோல வடசென்னை பகுதியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் சிலைகள் காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் கடலில் கரைக்கப்பட உள்ளது. மாலை 4 மணி அளவில் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிக்குச் சென்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கும் நிகழ்ச்சியை பார்வையிடுகிறார். அங்கு கூடியிருக்கும் இந்து முன்னணி தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார்.
போலீஸ் பாதுகாப்பு
விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பிற்காக இன்று குவிக்கப்படுகிறார்கள்.
ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் ஒவ்வொரு விநாயகர் சிலைக்கும் ஒரு போலீஸ்காரர் பாதுகாப்பிற்காக செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுதவிர விநாயகர் சிலைகள் ஊர்வலப்பாதை முழுவதும் பாதுகாப்பிற்காக போலீசார் நிறுத்தப்படுகிறார்கள்.
விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
குறைதீர்க்கும் நிகழ்ச்சி ரத்து
நேற்றைய தினமும் பாரத் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறுவதால் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) பொதுமக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஒருநாள் மட்டும் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story