மாணவர் விடுதி அருகே கிடந்த குப்பைகள் அகற்றம்


மாணவர் விடுதி அருகே கிடந்த குப்பைகள் அகற்றம்
x
தினத்தந்தி 1 Sept 2017 3:17 AM IST (Updated: 1 Sept 2017 3:17 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக மாணவர் விடுதி அருகே கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டது.

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள தொப்பூர் ஊராட்சிக்குட்பட்ட தர்கா பகுதியில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அரசு மாணவர் நல விடுதி உள்ளது. இதில் தொப்பூர் மற்றும் செக்காரப்பட்டி, ராமதாஸ்தண்டா, எருமப்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி, தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்த விடுதி பகுதியில் ஓட்டல்கள், டீக்கடைகள், தனியார் தங்கும் விடுதிகள் என பல்வேறு வணிக நிறுவனங்கள் உள்ளன. இதில் தினமும் சேரும் குப்பை கழிவுகள், அரசு மாணவர் விடுதியின் பின்புறம் கொட்டப்படுகிறது. இந்த விடுதியின் வெளிப்புற வளாகத்தை சுற்றிலும் முட்புதர்கள் மண்டி காணப்படுகிறது. மாதக்கணக்கில் அள்ளப்படாத குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடாக உள்ளது. இதனால் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் என ‘தினத்தந்தி நகர்வலம்’ பகுதியில் நேற்று செய்தி வெளியானது.

இந்த நிலையில் ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக நேற்று அந்த மாணவர் விடுதி அருகே குவிந்து கிடந்த குப்பைகளை அள்ளிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி பொக்லைன் எந்திரம் மூலம் முட்புதர்கள் அகற்றப்பட்டது. குப்பைகளும் அள்ளப்பட்டது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

Next Story