விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: 7 நாள் பூஜைக்கு பின்னர் விநாயகர் சிலைகள் கரைப்பு

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக 7 நாள் பூஜைக்கு பின்னர் நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
மும்பை,
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக 7 நாள் பூஜைக்கு பின்னர் நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்திமும்பையில் விநாயகர் சதுர்த்தி திருவிழா கடந்த 25–ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி வீடு, தெருக்கள் மற்றும் மண்டல்கள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்து வருகின்றன. விநாயகர் சதுர்த்தியையொட்டி வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை பொதுமக்கள் தங்கள் நேர்ச்சைக்கு ஏற்றவாறு 1½, 3, 5, 7 மற்றும் 10 நாட்களுக்கு பின்னர் கடல் மற்றும் நீர்நிலைகளில் கொண்டு சென்று கரைப்பது வழக்கம்.
நேற்று ஏராளமானவர்கள் தங்கள் வீடுகளில் பிரதிஷ்டை செய்திருந்த விநாயகர் சிலைகளை 7 நாட்கள் பூஜைக்கு பின்னர் கரைக்க எடுத்து சென்றனர்.
வீதியில் ஊர்வலம்பாரம்பரிய இசைவாத்தியங்கள் முழங்க பக்தர்கள் விநாயகர் சிலைகளை டெம்போ, தள்ளுவண்டி மற்றும் கைகளில் ஏந்தியபடியும் வீதிகளில் ஊர்வலமாக எடுத்து சென்றனர். ‘கண்பதி பப்பா மோர்யா’ என்ற பக்தி கோஷத்தை முழங்கியபடி ஆட்டம் பாட்டத்துடன் நீர்நிலைகளுக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கு விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள், கற்பூர ஆரத்தி எடுத்த பின்னர் தண்ணீரில் கொண்டு போய் கரைத்தனர்.
கிர்காவ், சிவாஜிபார்க், பாந்திரா மற்றும் ஜூகு கடற்கரைகள் மற்றும் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள செயற்கை குளங்களில் கொண்டு சென்று விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
விடிய, விடிய சிலை கரைப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான சிலைகள் கரைக்கப்பட்டன.