100 நாள் திட்ட பணியாளர்கள் மொடக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை


100 நாள் திட்ட பணியாளர்கள் மொடக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை
x
தினத்தந்தி 2 Sept 2017 3:45 AM IST (Updated: 2 Sept 2017 1:40 AM IST)
t-max-icont-min-icon

100 நாள் திட்ட பணியாளர்கள் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க வட்டார தலைவர் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மொடக்குறிச்சி,

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 23 ஊராட்சிகளிலும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சுமார் 5 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் 200–க்கும் மேற்பட்டோர் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க வட்டார தலைவர் தங்கவேல் தலைமையில் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலா அங்கு சென்று தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தொழிலாளர்கள் கூறும்போது, ‘மொடக்குறிச்சி ஒன்றியத்தில் தற்போது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வேலை வழங்கப்படுவதில்லை. ஒவ்வொரு ஊராட்சிக்கும் 5 பேருக்கு மட்டுமே பணிகள் வழங்கப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக இதே நிலைதான் நீடித்து வருகிறது. எனவே பாரபட்சமின்றி அனைவருக்கும் வேலை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

அதற்கு அதிகாரி, ‘தற்போது, 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு புதிய திட்டங்களின் மூலம் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே அனைவருக்கும் வேலை வழங்கப்படும்.’ என்றார். அதை ஏற்றுக்கொண்ட பணியாளர்கள் முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story