விழிப்புணர்வால் ‘பலரது உயிரை காப்பாற்றக்கூடிய நிலையை உருவாக்கிட முடியும்’ கலெக்டர் ரோகிணி பேச்சு


விழிப்புணர்வால் ‘பலரது உயிரை காப்பாற்றக்கூடிய நிலையை உருவாக்கிட முடியும்’ கலெக்டர் ரோகிணி பேச்சு
x
தினத்தந்தி 2 Sept 2017 4:45 AM IST (Updated: 2 Sept 2017 3:54 AM IST)
t-max-icont-min-icon

‘டெங்கு’ காய்ச்சல் தடுப்புப்பணி விழிப்புணர்வால் பலரது உயிரை காப்பாற்றக்கூடிய நிலையை உருவாக்கிட முடியும் என்று பள்ளி மாணவிகளிடம் கலெக்டர் ரோகிணி பேசினார்.

சேலம்,

சேலம் மாநகராட்சி குகை மூங்கப்பாடி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு, டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதியேற்பு நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. மாநகராட்சி தனி அலுவலரும், ஆணையாளருமான ஆர்.சதீஷ் முன்னிலை வகித்தார்.
கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து பேசினார்.

மேலும் பள்ளி வளாகத்தில் மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயத்தை வினியோகம் செய்தார். பின்னர் மாணவிகள் மத்தியில் தானும் நிலவேம்பு கசாயத்தை அருந்தினார். அப்போது டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடிஸ் கொசுக்கள் எப்படி உருவாகிறது என மாணவிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
பின்னர் மாணவிகள் மத்தியில் கலெக்டர் ரோகிணி பேசியதாவது:-

டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் உங்களின் குடும்பங்களுக்கும், நண்பர்கள், உற்றார் உறவினர்களுக்கு எடுத்து சொல்லும் ‘கதாநாயகிகள்‘ நீங்கள்(மாணவிகள்)தான். எனவே, உங்களால் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த பள்ளியில் 2,750 மாணவிகள் படித்து வருகிறீர்கள். டெங்கு குறித்து ஒரு மாணவி 10 அல்லது 20 பேரிடம் எடுத்து சொல்லும் வேளையில் அது 27 ஆயிரம் பேர் முதல் 50 ஆயிரம் பேர் வரை சென்றடையும் வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்வது உங்களால் தான் முடியும். அதன் மூலம் பலரது உயிரை காப்பாற்றக்கூடிய நிலையை உருவாக்கிட முடியும்.

சேலம் மாவட்டத்தில் கொசுக்களால் காய்ச்சல் அதிகரித்துள்ளது. அதில் ‘டெங்கு‘ காய்ச்சலும் அடங்கும். டெங்கு எப்படி உருவாகிறது என்று தெரிந்தாலும் இன்னும் விழிப்புணர்வு என்பது தேவையாக உள்ளது. உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மாணவிகளாகிய நீங்கள் படிப்பிலும் கவனம் செலுத்த முடியும். அதற்கு சுற்றுப்புறங்களை நாம் சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும். டெங்கு கொசுக்கள் நல்ல தண்ணீரில் தான் உற்பத்தியாகிறது.

குறிப்பாக வீடுகளில் உள்ள தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டைகள், பயன்படாத டயர்கள் ஆகியவற்றை அகற்றுவதன் மூலமும், குடிநீர் தேக்கி வைக்கக்கூடிய பாத்திரங்கள் மற்றும் டிரம்களை சுத்தமாக பராமரித்தல் போன்ற பணிகள் மூலமும் டெங்கு கொசுப்புழுக்களை வளராமல் தடுக்கலாம்.

நானும் இதைவிட சிறிய அரசு பள்ளியில்தான் கல்வி கற்றேன். கல்வியின் பயனை கிராம மக்களிடம் எடுத்துரைத்து, குழந்தை திருமணங்களை தடுத்து, சக மாணவிகள் தொடர்ந்து கல்வி பயில உறுதுணையாக இருந்துள்ளேன். அதுபோல நீங்களும், உங்களில் யாராவது பள்ளிக்கு வராமல் இருந்தால் கூட, அம்மாணவியின் பெற்றோரிடம் பேசி பள்ளிக்கு வரச்செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக கலெக்டர் ரோகிணி தலைமையில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி மாணவிகளால் எடுத்துக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களையும் அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் பிரபாகரன், சுகாதார அலுவலர் சேகர், சுகாதார ஆய்வாளர்கள் சித்தேஸ்வரன், கோபி, உதவி தலைமை ஆசிரியர் ஸ்ரீராம் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story