எடப்பாடி அரசை அகற்ற வேண்டும் என குரல் கொடுத்து வரும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் போராளிகள் டி.டி.வி.தினகரன் பேட்டி

எடப்பாடி அரசை அகற்ற வேண்டும் என குரல் கொடுத்து வரும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் போராளிகள் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் நடந்த கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்க அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று வந்தார். பின்பு அவர் துறைமங்கலம் மூன்றுசாலை அருகே உள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
நீட் தேர்வு தொடர்பாக தி.மு.க. சார்பில் அறிவாலயத்தில் நாளை (அதாவது இன்று) நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் நாங்கள் பங்கேற்க மாட்டோம். எங்களது ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என திவாகரன் ஆர்வத்தில் சொல்லி இருக்கலாம். அது அவரது தனிப்பட்ட கருத்து. எடப்பாடி மற்றும் குழுவினருக்கு மத்திய மந்திரி சபையில் இடம் கொடுத்தால் மத்திய அரசிற்கு இருக்கும் நல்ல பெயர் கெட்டு போய் விடும்.
எடப்பாடி அரசை அகற்ற வேண்டும் என குரல் கொடுத்து வரும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் போராளிகள். அவர்களுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன். எனக்கு ஆதரவாக அவர்கள் இல்லை. அவர்களுக்கு என் மீது எந்த விதமான அதிருப்தியும் இல்லை. கட்சிக்கும், மக்களுக்கும் துரோகம் இழைத்து வரும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் நீக்கும் வரை அவர்கள் ஓயமாட்டர்கள்.
தமிழக மக்களின் கவனத்தை, குறிப்பாக கவர்னரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று தான் அவர்கள் ஒரு இடத்தில் கூடி இருக்கிறார்கள். சொந்த வேலை காரணமாக ஊருக்கு அவர்கள் சென்று வருவார்கள். நான் குழுமூர் அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த போது என்னுடன் 4 அல்லது 5 எம்.எல்.ஏக்கள் வந்திருந்தனர்.
நான் மீண்டும், மீண்டும் சொல்கிறேன். இன்றைக்கு நடைபெறுகிற அரசாங்கத்தை நாங்கள் உருவாக்கினோம். நாங்கள் யாரை முதல்–அமைச்சராக ஆக்கினோமோ அந்த முதல்–அமைச்சர் கட்சிக்கும், மக்களுக்கும் துரோகம் செய்கிறார். அதனால் அவரை நீக்க வேண்டும் என்று தான் கடந்த 12 நாட்களாக எங்களது சட்டமன்ற உறுப்பினர்கள் போராடி வருகிறார்கள். எங்களை பொறுத்த வரை இன்றைக்கு தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கட்சியை காப்பாற்ற வேண்டும். தமிழக மக்களின் நலனை காப்பாற்றிடவும், கட்சி தொண்டர்களின் நலன் கருதியும் நாங்கள் எந்த ஒரு முடிவையும் எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.