குளிக்க சென்ற போது ஏரி, குட்டையில் மூழ்கி அண்ணன்–தம்பி உள்பட 5 பேர் சாவு

மேல்மலையனூர் அருகே குளிக்க சென்ற அண்ணன்–தம்பி இருவரும் குட்டையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேல்மலையனூர்,
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள முருகன்தாங்கல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. விவசாயி. இவருடைய மகன்கள் சிலம்பரசன்(வயது 12), பாண்டியன்(11). தேவனூரில் உள்ள அரசு பள்ளியில் சிலம்பரசன் 7–ம் வகுப்பும், பாண்டியன் 6–ம் வகுப்பும் படித்து வந்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் அண்ணன்–தம்பி இருவரும் குளிப்பதற்காக அதேஊரில் உள்ள ஒரு குட்டைக்கு சென்றனர்.
பின்னர் இருவரும் குட்டையில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது பாண்டியன் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினான். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த சிலம்பரசன் தனது தம்பியை காப்பாற்ற முயன்றபோது, அவனும் தண்ணீரில் மூழ்கி, தத்தளித்தபடி அபயக்குரல் எழுப்பினான். இதைகேட்ட அக்கம் பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் விரைந்து வந்து, அண்ணன்–தம்பி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிலம்பரசனும், பாண்டியனும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். குளிக்க சென்ற அண்ணன்–தம்பி குட்டையில் மூழ்கி பலியான சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.