பெண்ணை பார்த்து ‘சம்மக் சல்லோ’ என கூறியவருக்கு கோர்ட்டு தண்டனை


பெண்ணை பார்த்து ‘சம்மக் சல்லோ’ என கூறியவருக்கு கோர்ட்டு தண்டனை
x

பெண்ணை பார்த்து ‘சம்மக் சல்லோ’ என கூறியவருக்கு கோர்ட்டு தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது.

தானே,

நடிகர் ஷாருக்கான் நடித்து 2011–ம் ஆண்டு வெளியான படம் ‘ரா ஒன்’. இந்த படத்தில் இடம்பெற்று இருந்த ‘சம்மக் சல்லோ’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து ஹிட் ஆனது. அந்த காலகட்டத்தில் எல்லோரும் தங்களை அறியாமல் முனுமுனுத்த பாடல் இது. இந்த பாடலில் இடம்பெற்ற ’சம்மக் சல்லோ’ என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் ஒருவர் கோர்ட்டில் குற்றவாளி கூண்டில் ஏறிய சம்பவம் தற்போது நடந்துள்ளது.

தானேயை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2009–ம் ஆண்டு ஜனவரி 9–ந்தேதி காலை நடைபயிற்சி முடித்துவிட்டு கணவருடன் வீடு திரும்பினார். அப்போது அவர் தெரியாமல் பக்கத்து வீட்டிற்கு வெளியே வைத்திருந்த குப்பை தொட்டியை தட்டிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டுக்காரர் குப்பை தொட்டியை தட்டிவிட்ட பெண் மற்றும் அவரது கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் அவர், பெண்ணை பார்த்து ‘சம்மக் சல்லோ’ என கூறிவிட்டார்.

பக்கத்து வீட்டுக்காரர் தன்னை பார்த்து ‘சம்மக் சல்லோ’ என கூறியதை பெண்ணால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. எனவே அவர் இது குறித்து தானே போலீசில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் இதற்கு எல்லாம் வழக்குப்பதிவு செய்ய முடியாது என கூறிவிட்டனர். எனினும் அந்த பெண் விடுவதாக இல்லை. அவர் தானே மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் முறையிட்டார். அவரது மனுவை கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

விசாரணை முடிவில், மாஜிஸ்திரேட்டு தீர்ப்பு கூறினார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–

‘சம்மக் சல்லோ’ என்பது இந்தி மொழி வார்த்தை. இதற்கு ஆங்கிலத்தில் வார்த்தை எதுவும் இல்லை. இந்த வார்த்தை இந்தியாவில் பெண்ணை இழிவாக கூற பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெண்ணை புகழ்ந்து கூறும் வார்த்தையில்லை. மேலும் பெண்ணின் கண்ணியத்தை காயப்படுத்தும் வார்த்தை. எனவே குற்றம்சாட்டப்பட்டவர் கூறிய அந்த வார்த்தை பெண்ணுக்கு எரிச்சலையும், கோபத்தையும் உண்டாக்கி உள்ளது. எனவே பெண்ணை ‘சம்மக் சல்லோ’ என கூறியவர் கோர்ட்டு முடியும் அவரை இங்கேயே இருந்து தண்டனையை அனுபவிக்க வேண்டும். மேலும் 1 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story