மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்


மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 Sept 2017 4:30 AM IST (Updated: 6 Sept 2017 3:16 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு போட்டியாக மதுக்கடையை திறக்ககோரி மதுபிரியர்கள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பாவூர்சத்திரம்,

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம்- கடையம் ரோட்டில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை பொதுமக்களின் தொடர் போராட்டத்தினால் நிரந்தரமாக மூடப்பட்டது. அதற்கு பதிலாக பாவூர்சத்திரம் அருகே நெல்லை- தென்காசி ரோட்டில் இருந்து கல்லூரணி செல்லும் சாலையில் இந்த கடை திறக்கப்பட உள்ளதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அப்போது அந்த பகுதி மக்கள் திரண்டு, டாஸ்மாக் கடை அமைய உள்ளதாக கூறப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்தினர். அதன்பிறகு அங்கு கடை திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் நெல்லை- தென்காசி ரோட்டில் கல்லூரணி செல்லும் ரோட்டில் மீண்டும் அதே இடத்தில் டாஸ்மாக் கடை நேற்று திறக் கப்பட்டது. தகவல் அறிந்த அந்த பகுதி ஆண்களும், பெண்களும் டாஸ்மாக் கடைக்கு திரண்டு வந்தனர். மது பிரியர்கள் மது வாங்க முடியாத அளவுக்கு கடையின் கேட்டை வெளிப்புறமாக பூட்டி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு மது வாங்க வந்திருந்த மதுபிரியர்கள் கடையை திறக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினர் இடையேயும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கு திடீர் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பெருமாள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஹபிபுல்லா, பரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பிரச்சினை தொடர்பாக தென்காசி தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்து முடிவு எடுக்கும் வரை கடை திறக்கப்படாது என்று போலீசார் கூறினர். அதன்பிறகு இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.

இதேபோல் ஆலங்குளம் அருகே அடைக்கலப்பட்டணம் பஸ்நிறுத்தத்தில் டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் ஆலங்குளம் தாசில்தார் சுப்புராயலு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி 2 மாதத்துக்குள் முடிவு செய்வதாக அவர் கூறினார். இதனை ஏற்க மறுத்த பொதுமக்கள், போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து அந்த கடை தற்காலிகமாக மூடப்பட்டது.

இதேபோல் ஆலங்குளம்- அம்பை ரோட்டில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை ஊழியர்கள் மீண்டும் திறந்தனர். இதனை கண்ட அண்ணாநகர், திரவியநகர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட புறப்பட்டனர். தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர், முறையாக தாசில்தாரிடம் மனு கொடுத்து கடையை அடைக்க உத்தரவு வாங்குமாறு கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட அவர்கள், இதுதொடர்பாக தாசில்தார் சுப்புராயலுவிடம் மனு கொடுத்தனர். பின்னர் டாஸ்மாக் கடை இருந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தென்காசி வாய்க்கால்பாலம் அருகில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பஸ் நிறுத்தம், அரசு போக்குவரத்துக் கழக பணிமனை, 2 தனியார் ஆஸ்பத்திரிகள், 3 பள்ளிக்கூடங்கள் உள்ளன. மேலும், இந்த கடையில் மது குடித்து விட்டு சிலர் தகராறில் ஈடுபடுவதும், வழக்குகள் பதிவு செய்யப்படுவதும் அடிக்கடி நடைபெறும் நிகழ்வு. எனவே இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறந்தால் மீண்டும் தேவை இல்லாத பிரச்சினைகள் ஏற்படும். எனவே திறக்கப்பட்ட இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கூறி பாரதீய ஜனதா கட்சியினர் தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது நகர பா.ஜ.க. இளைஞர் அணி தலைவர் முருகன் தலைமையில் டாஸ் மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்து சென்றனர். 

Related Tags :
Next Story