சேலம் பொன்னம்மாபேட்டையில் நகர கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்ட நெசவாளர்கள் ஜப்தி
சேலம் பொன்னம்மாபேட்டையில் நகர கூட்டுறவு வங்கி கிளையை நெசவாளர்கள் முற்றுகையிட்டனர். ஜப்தி நடவடிக்கையை கைவிட வலியுறுத்தினர்.
சேலம்,
சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த நெசவாளர்கள் கடந்த 1999 மற்றும் 2000–ம் ஆண்டுகளில் தங்களது தொழிலை மேம்படுத்துவதற்காக வீட்டு பத்திரத்தை அடமானமாக வைத்து ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்திற்கும் மேல் கடனாக அங்குள்ள ராமசாமி தெருவில் அமைந்திருக்கும் நகர கூட்டுறவு வங்கி கிளையில் பெற்றதாக கூறப்படுகிறது.
கடந்த 2013–ம் ஆண்டு தமிழக அரசு நெசவாளர்களின் வட்டி மற்றும் அபராத வட்டியினை தள்ளுபடி செய்தது. அசலை மட்டும் கட்டுபவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டது. அவர்களில் பலர் அசல் தொகையை செலுத்தி பத்திரத்தை மீட்டனர். ஆனால், சில நெசவாளர்கள் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்ற தொகையை 17 ஆண்டு ஆகியும் திருப்பி செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அதாவது சிறு தொகை மட்டும் செலுத்தி விட்டு, அதன் பின்னர் கட்டவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், அசலுடன் வட்டி, அபராத வட்டி என இன்று பலமடங்காக தொகை உயர்ந்து விட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, கடன் பெற்ற நெசவாளர்களில் திரும்ப தொகை செலுத்தாதவர்களுக்கு, கூட்டுறவு வங்கி நிர்வாகம் ஜப்தி நோட்டீஸ் அனுப்பியது. அதாவது குறிப்பிட்ட நாட்களுக்குள் பணத்தை திரும்ப செலுத்தாவிட்டால், வீடு ஜப்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இல்லையேல், வீடு ஏலம் விடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று சேலம் நகர கூட்டுறவு வங்கி பொன்னம்மாபேட்டை கிளை முன்பு நெசவாளர்கள் திரண்டு முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் வங்கி அதிகாரிகளிடம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மோகன் மற்றும் நிர்வாகி விமலன் உள்பட பலர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதாவது, நெசவாளர்கள் நலன்கருதி அவர்கள் வாங்கிய தொகை மீதான வட்டி மற்றும் அபராத வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், அதுபோக மீதம் உள்ள தொகையை வங்கியில் செலுத்த தயாராக இருப்பதால் ஜப்தி நடவடிக்கையை கைவிட வேண்டும், என்றும் தெரிவித்தனர்.
அதற்கு, அங்கிருந்த அதிகாரிகள் சிலர், உயர் அதிகாரிகளிடம் இது தொடர்பாக பேசி முடிவெடுக்க முடியும். நாங்களே எவ்வித முடிவும் எடுக்க முடியாது, என்றனர்.
இதுகுறித்து நெசவாளர்கள் முத்து, சேகர், மணி, ராமர் உள்ளிட்ட சிலர் கூறுகையில், ‘‘1999–ம் ஆண்டில் ரூ.95 ஆயிரமாக வாங்கிய கடன் தொகைக்கு, தற்போது வட்டி, அபராத வட்டி சேர்த்து ரூ.4 லட்சத்திற்கு மேல் பனமடங்கு உயர்ந்துள்ளது.
அரசு சலுகை அறிவித்த வேளையில் குறிப்பிட்ட நெசவாளர்களை மட்டும் வங்கி நிர்வாகம் அழைத்து சலுகைகளை வழங்கி இருக்கிறது. ஆனால், எங்களுக்கு எந்த அழைப்பும் இல்லை. தற்போது எங்களது வீடுகளை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருவது வேதனை அளிக்கிறது. இதை நிர்வாகம் கைவிட வேண்டும்‘‘ என்றனர்.