ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தர்ணா போராட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு


ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தர்ணா போராட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
x
தினத்தந்தி 12 Sept 2017 4:30 AM IST (Updated: 12 Sept 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில் நடந்த தர்ணா போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி,

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்து, 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அதுவரை 1.1.2016 முதல் 20 சதவீத இடைகால நிவாரணம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை, தொகுப்பு, மதிப்பூதியங்களை ஒழித்து, வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

7-ந் தேதி மாவட்டத்தில் 6 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1,944 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டது. ஆனாலும் மாவட்ட தலைநகரங்களில் 8-ந் தேதி ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தர்ணா போராட்டம்

இதன் தொடர்ச்சியாக நேற்று கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை முன்பு ஜாக்டோ - ஜியோ சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில தலைவர் தியோடர்ராபின்சன், மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் அலெக்சாண்டர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் நாராயணன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், தமிழ்நாடு அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் நந்தகுமார், வருவாய்த்துறை ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் பார்த்தீபன் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆசிரிய, ஆசிரியைகள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story