காய்ச்சல் வந்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்


காய்ச்சல் வந்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்
x
தினத்தந்தி 5 Oct 2017 6:05 AM IST (Updated: 5 Oct 2017 6:05 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் காய்ச்சல் வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று கலெக்டர் ராமன் கூறினார்.

வேலூர்,

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ராமன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சலை பரப்பும் ‘ஏடீஸ்’ கொசுக்களை ஒழிக்கும் பணியில் 1,350 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் கொசு ஒழிப்பு பணிகளை தொடர்ந்து தீவிரமாக செய்து வருகிறார்கள்.

பொதுமக்கள் அதிகளவு கூடும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை மூலம் நகர, கிராம பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது தொடர்பாக விழிப்புணர்வு கூட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருந்தால் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். அரசு கட்டிடங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசு கட்டிடங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் தூய்மையாக உள்ளது என்று சான்று வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கொசுக்களை ஒழிக்கும் பணியில் தனியார் பள்ளி, கல்லூரிகளும் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பில் உள்ள மாணவர்கள் இந்த பணியில் ஈடுபட வேண்டும். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு தேவையான ரத்தமும், தட்டணுக்களும் அரசு மருத்துவமனைகளில் இருப்பு உள்ளது.

மேலும் சித்த மருத்துவத்துறை சார்பில் பள்ளி, கல்லூரிகளில் 3 நாட்கள் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட உள்ளது. காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அங்கு டெங்கு காய்ச்சலை குணப்படுத்துவதற்கான சிகிச்சை அளிக்கப்படும். போலி மருத்துவர்களை பொதுமக்கள் நாடி செல்ல வேண்டாம்.

வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு எதுவும் இல்லை. கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை மாவட்டத்தில் 110 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கடந்த 9 மாதங்களில் சுமார் 45 ஆயிரம் பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். டெங்கு, மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு, காய்ச்சல் குணப்படுத்தப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் தற்போது 7 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று (வியாழக்கிழமை) முதல் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ‘ஏடீஸ்’ கொசு ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அதன்படி ஒவ்வொரு பள்ளி, அரசு அலுவலகங்கள், பொதுத்துறை அலுவலங்கள், அரசு மருத்துவமனைகளில் டெங்கு நோய் பரப்பும் கொசுக்கள் பற்றியும், அவை உற்பத்தியாகும் இடங்கள், தடுப்பு நடவடிக்கை மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் ஆரம்ப நிலையில் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், உறுதிமொழியும் எடுக்கப்படும்.

பொதுமக்களுக்கு வருவது சாதாரண காய்ச்சலா? டெங்கு காய்ச்சலா? என கண்டறிய அடுக்கம்பாறை, திருப்பத்தூர், அரக்கோணம் அரசு மருத்துவமனைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story