தமிழகத்தில் தொடரும் டெங்கு காய்ச்சல் மரணம்: சென்னை மாணவர் உள்பட 17 பேர் சாவு


தமிழகத்தில் தொடரும் டெங்கு காய்ச்சல் மரணம்: சென்னை மாணவர் உள்பட 17 பேர் சாவு
x
தினத்தந்தி 8 Oct 2017 5:30 AM IST (Updated: 8 Oct 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் சென்னை மாணவர் உள்பட 17 பேர் பலியானார்கள்.

பூந்தமல்லி,

தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் சாவு எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கிறது.

பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடி, சிப்பாய் நகர் பகுதியை சேர்ந்தவர் பெனிட்டா. கூலி தொழிலாளி. இவருடைய மகன் பன்னீர்செல்வம் (வயது 15). 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த இவர், தற்போது சிறப்பு தனித்தேர்வு எழுதி உள்ளார்.

கடந்த 3 நாட்களாக பன்னீர்செல்வம் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் காய்ச்சல் அதிகமானதால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரது உடல் நிலை மோசமானதால் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் இரவு பன்னீர்செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.

பூந்தமல்லி நகராட்சி பகுதியில் கடந்த 4 நாட்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்து உள்ளனர். ஆனால் நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இதுவரை எந்தவித தடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த ஆற்காடு கிராமத்தைச் சேர்ந்த துலுக்காணம் என்பவரது மனைவி நாகம்மாள் (49) நேற்று டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். அதே பகுதியைச் சேர்ந்த மல்லிகா (68) கடந்த வியாழக்கிழமை டெங்கு காய்ச்சலுக்கு பலியானார்.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி நிவாஷினி, வாழப்பாடி பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி கிருத்திகா, பள்ளக்காடு பகுதியை சேர்ந்த 1-ம் வகுப்பு மாணவன் சிவகார்த்தி, கிருஷ்ணகிரி மாவட்டம் தாதம்பட்டியை சேர்ந்த 7 மாத கர்ப்பிணி கவிதா, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை முத்துமாரி, நெல்லையை சேர்ந்த கல்யாணசுந்தரம் உள்பட மேலும் 15 பேர் நேற்று ஒரே நாளில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானார்கள்.

Next Story