சாலையில் தேங்கும் சாயக்கழிவுநீர் நுரையால் வாகன ஓட்டிகள் அவதி


சாலையில் தேங்கும் சாயக்கழிவுநீர் நுரையால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 8 Oct 2017 4:00 AM IST (Updated: 8 Oct 2017 2:47 AM IST)
t-max-icont-min-icon

வெண்ணந்தூர் அருகே சாலையில் தேங்கும் சாயக்கழிவுநீர் நுரையால் வாகன ஓட்டிகள் அவதி உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா?

வெண்ணந்தூர்,

வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மதியம்பட்டியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு விவசாயம் மற்றும் விவசாய கூலித்தொழில் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இங்கு வசிப்பவர்கள் தினமும் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கும், வங்கிகளுக்கும், போலீஸ் நிலையம் செல்வதற்கும் மற்றும் அனைத்து வேலைகளுக்கும் வெண்ணந்தூருக்கு தான் சென்று வருகின்றனர். இந்த நிலையில் மதியம்பட்டி ஏரிக்கும் சவுரிப்பாளையம் ஏரிக்கும் இடையில் மணிமுத்தாற்று தண்ணீர் வரும் ஒரு தரைப்பாலம் உள்ளது. இந்த வழியாகத்தான் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்த வழியாக ஏராளமான பஸ்களும், தனியார் பள்ளி வாகனங்களும் சென்று வருகிறது.

வெண்ணந்தூரில் இருந்து ஆட்டையாம்பட்டி வழியாக திருச்செங்கோடு சென்றால் அதிக தூரம் என்பதால், வெண்ணந்தூரில் இருந்து சவுரிப்பாளையம் வழியாக மல்லசமுத்திரம், திருச்செங்கோடு செல்பவர்கள் அதிகமாக உள்ளனர். இந்த வழியாக சென்றால் நான்கு கிலோ மீட்டர் தூரம் குறையும் என்பதால் இந்த வழியை அதிகம் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மல்லசமுத்திரத்தில் வாரச்சந்தை புதன்கிழமை தோறும் நடைபெறும் என்பதால் இதற்கு வெண்ணந்தூர், அலவாய்ப்பட்டி, நடுப்பட்டி, காணாம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளையும் பொருட்களை விற்பனை செய்வதற்கு இந்த வழியாகத்தான் செல்லவேண்டும். இந்த சூழ்நிலையில் சேலம் பகுதியில் அதிகமழை பெய்யும் போது அதிக அளவு தண்ணீர் இந்த தரைப்பாலத்தின் வழியாக வரும். அப்போது தரைமட்ட பாலம் வழியாக தண்ணீர் அதிகம் செல்லும். மேலும் மழைநீரோடு சாயக்கழிவு நீரும் சேர்ந்து வருவதால் நுங்கும், நுரையுமாக தண்ணீர் வருகிறது. இவ்வாறு அடிக்கடி வரும் நுரை சாலையில் பல அடி உயரத்துக்கு தேங்கி இருப்பதால் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இவ்வழியாக உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Related Tags :
Next Story