கள்ளக்குறிச்சி அருகே கோமுகி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு; தடுப்பணை உடைந்தது


கள்ளக்குறிச்சி அருகே கோமுகி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு; தடுப்பணை உடைந்தது
x
தினத்தந்தி 10 Oct 2017 3:45 AM IST (Updated: 9 Oct 2017 11:13 PM IST)
t-max-icont-min-icon

தடுப்பணை விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே சோமண்டார்குடி கோமுகி ஆற்றின் குறுக்கே கடந்த ஆண்டு ரூ.1 கோடி செலவில் புதிதாக தடுப்பணை கட்டப்பட்டது.

கள்ளக்குறிச்சி,

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே சோமண்டார்குடி கோமுகி ஆற்றின் குறுக்கே கடந்த ஆண்டு ரூ.1 கோடி செலவில் புதிதாக தடுப்பணை கட்டப்பட்டது. கோமுகி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் இந்த தடுப்பணை, கிளை வாய்க்கால்கள் மூலம் ஏமப்பேர் ஏரி மற்றும் தச்சூர், விளம்பார், மலைக்கோட்டாலம் உள்ளிட்ட ஏரிகளுக்கு செல்லும். இந்த ஏரிகளுக்கு செல்லும் தண்ணீர் மூலம் 10–க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்தநிலையில் கோமுகி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கல்வராயன்மலையில் நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக 41 அடியாக இருந்த அணையின் நள்ளிரவில் 43 அடியாக கிடுகிடுவென உயர்ந்தது. இதையறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 4 மணி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீரை கோமுகி ஆற்றில் திறந்து விட்டனர். இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சோமண்டார்குடி கோமுகி ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை உடைந்தது. இதனால் தடுப்பணையில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் செல்வது தடை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சோமண்டார்குடியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், இந்த தடுப்பணை மூலம் கோமண்டார்குடி உள்ளிட்ட 10–க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பயன்பெற்று வந்தோம். கடந்த சில நாட்களாக கல்வராயன்மலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோமுகி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கிளை வாய்க்கால்கள் மூலம் ஏரிகளுக்கு சென்று கொண்டிருந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கல்வராயன்மலையில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால், பொதுப்பணித்துறையினர் நள்ளிரவு திடீரென ஆற்றில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து விட்டனர். இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இந்த தடுப்பணை உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக ஆற்றில் செல்வதால், ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் என்னை போன்ற விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மேலும் இப்பகுதி கிராமங்களில் விவசாய பணிகள் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே உடைந்த தடுப்பணையை தரமாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story