தீபாவளி பண்டிகையின்போது பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்


தீபாவளி பண்டிகையின்போது பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்
x
தினத்தந்தி 14 Oct 2017 4:00 AM IST (Updated: 14 Oct 2017 3:47 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையின்போது பறவைகளுக்காக திருப்பத்தூர் அருகே உள்ள கிராமமக்கள் பட்டாசு வெடிப்பது இல்லை.

திருப்பத்தூர்,

தீபாவளி பண்டிகை என்றாலே மனதிற்கு மகிழ்ச்சியை தரக்கூடிய பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் அதிகாலையிலேயே மக்கள் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு புத்தாடைகள் அணிந்து சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள். இது மட்டுமல்லாமல் தங்கள் வீடுகளில் பலகாரங்கள் செய்து அதை அருகில் வசிக்கும் தனது உறவினர்கள் உள்ளிட்டவர்களுக்கு கொடுத்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வார்கள். இந்தாண்டு தீபாவளி பண்டிகை வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

ஆனால் திருப்பத்தூர் அருகே உள்ள கொள்ளுக்குடிப்பட்டி கிராம மக்கள் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிப்பது இல்லை. பட்டாசு சத்தம் இன்றி அமைதியான முறையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இதற்கு காரணம் திருப்பத்தூர்-மதுரை சாலையில் உள்ளது வேட்டங்குடிப்பட்டி பறவைகள் சரணாலயம் தான்.

இந்த சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரேசில், ஸ்பெயின் உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி அந்த மரத்தின் மேல் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யும். பெரும்பாலும் இந்த பறவைகள் வருவது இந்த தீபாவளி பண்டிகை காலத்தையொட்டியே ஆகும்.

இதனால் பகல் நேரத்தில் அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் மற்றும் இரவு நேரங்களில் வானில் வெடித்து சிதறும் பட்டாசுகள் போட்டால் இந்த பறவைகள் அச்சமடைந்து காலப்போக்கில் அவை இங்கு வருவதை தவிர்த்து விடும் என்பதற்காகவும், இந்த பறவைகளுக்கு எந்தவித இடையூறும் கொடுக்க கூடாது என்ற நோக்கத்திலும் இந்த கிராமத்து மக்கள் தீபாவளி பண்டிகை மற்றும் தங்களின் குடும்ப விழாக்களின்போது பட்டாசுகள் வெடிப்பதில்லை.

இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறும்போது, எங்கள் கிராமத்தில் உள்ள இந்த சரணாலயத்தில் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி செல்லும். இந்த பறவைகளை எங்கள் குடும்பத்தில் ஒருவராக பாவித்து வருவதால் அவற்றிக்கு எந்தவித இடையூறும் ஏற்பட கூடாது என்ற நோக்கத்தில் நாங்கள் தீபாவளி உள்பட எந்த பண்டிகையின் போதும் பட்டாசு வெடிப்பதில்லை.

இதை எங்கள் வீட்டு குழந்தைகளிடம் சொல்லி வளர்த்து வருகிறோம். அவர்களும் இதை புரிந்து கொண்டு அன்றைய தினம் பட்டாசு கேட்டு அடம் பிடிப்பதில்லை என்றனர். 

Next Story