பாப்பனாறு வாய்க்கால் உடைந்து மழை நீர் வயலில் புகுந்தது வெள்ள மீட்பு குழுவினர் சீரமைத்தனர்


பாப்பனாறு வாய்க்கால் உடைந்து மழை நீர் வயலில் புகுந்தது வெள்ள மீட்பு குழுவினர் சீரமைத்தனர்
x
தினத்தந்தி 5 Nov 2017 4:00 AM IST (Updated: 5 Nov 2017 3:08 AM IST)
t-max-icont-min-icon

வெண்மனச்சேரி பாப்பனாறு வடிகால் வாய்க்கால் உடைந்து மழைநீர் வயலில் புகுந்தது. உடைந்த வாய்க்காலை வெள்ள மீட்பு குழுவினர் சீரமைத்தனர்.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் வெண்மனச்சேரியில் பாப்பனாறு வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் அரிச்சந்திரா நதியில் இருந்து பிரிந்து சித்தாய்மூர், எட்டுக்குடி, வெண்மனச்சேரி, அச்சுக்கட்டளை ஆகிய ஊர்களின் வடிகாலாக பயன்பட்டு வருகிறது. இந்த நிலையில் கீழையூர் ஒன்றியத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வெண்மனச்சேரியில் உள்ள பாப்பனாறு வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு மழைநீர் முழுவதும் விவசாய நிலத்திற்குள் புகுந்தது. இதனால் விவசாயிகள் மேற்கொண்டுள்ள சம்பா பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. இதையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர்தேஷ்முக் உத்தரவின்பேரில், உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் மேற்பார்வையில், வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தலைமையில் 8 போலீசார் அடங்கிய வெள்ள மீட்பு குழுவினர் உடைப்பு ஏற்பட்ட பகுதிக்கு சென்று, மண் மூட்டைகள் மற்றும் பனை ஓலைகளை வைத்து வாய்க்காலை சீரமைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த கோபால் எம்.பி. சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பாப்பனாறு வாய்க்கால் குறுக்கே வெண்மனச்சேரி- அச்சுக்கட்டளையை இணைக்கும் பாலம் மிகவும் தாழ்வாக உள்ளது. இதனால் வெள்ளநீர் வாய்க்காலில் செல்லமுடிவதில்லை. இதனால் வாய்க்காலில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வயல்களில் புகுந்துவிடுகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே, அந்த பாலத்தை உயர்த்தி கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் கோபால் எம்.பி. எட்டுக்குடி காலனித்தெருவில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்துள்ளதை பார்வையிட்டார். அப்போது உதவி திட்ட அலுவலர் கீதாரத்தினம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோதிமணி, பாஸ்கரன், அ.தி.மு.க. கீழையூர் ஒன்றிய செயலாளர் வேதையன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story