மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்


மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 7 Nov 2017 4:15 AM IST (Updated: 7 Nov 2017 2:41 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்தும், கூட்ட அரங்கில் பொதுமக்களிடம் இருந்தும் கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்று கொண்டார்.

இந்த கூட்டத்தில் கல்வி உதவித் தொகை, வங்கிக் கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதி சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 441 மனுக்கள் பெறப்பட்டது.

பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் நிலுவையில் உள்ள மனுக்களின் தொடர் நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் ஆய்வு செய்தார்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 2 மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்களையும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு முதுகு தண்டுவட சக்கர நாற்காலியினையும், 3 மாற்றுத் திறனாளிகளுக்கு காதொலி கருவிகளையும் கலெக்டர் வழங்கினார். மேலும் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கு நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story