செல்போனில் ஆபாச படம் இருந்ததால் விமானத்தில் கணவன்-மனைவி கட்டிப்புரண்டு சண்டை


செல்போனில் ஆபாச படம் இருந்ததால் விமானத்தில் கணவன்-மனைவி கட்டிப்புரண்டு சண்டை
x
தினத்தந்தி 8 Nov 2017 4:15 AM IST (Updated: 8 Nov 2017 1:56 AM IST)
t-max-icont-min-icon

கணவரின் செல்போனில் ஆபாச படங்கள் இருந்ததால் அவருடன் மனைவி கட்டிப்புரண்டு சண்டை போட்டார். சண்டையை தீர்க்க முடியாததால் விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஆலந்தூர்,

கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் இருந்து இந்தோனேசியாவின் பாலிதீவு நோக்கி விமானம் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இதில் ஈரான் நாட்டைச் சேர்ந்த கணவன்-மனைவி உள்பட 284 பயணிகள் பயணம் செய்தனர். விமானம் நடுவானில் பறந்தபோது, கணவரின் செல்போனை மனைவி எடுத்து பார்த்துக்கொண்டு இருந்தார்.

அதில் ஏராளமான ஆபாச படங்களும், சில பெண்களின் ஆபாச புகைப்படங்களும் இருந்தன. இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி தூங்கிக்கொண்டு இருந்த கணவனை எழுப்பி கேட்டார். இதையடுத்து கணவன்-மனைவி இடையே விமானத்தில் தகராறு ஏற்பட்டது.

கட்டிப்புரண்டு சண்டை

சிறிதுநேரத்தில் வாய்த்தகராறு கைகலப்பானது. இருவரும் கட்டிப்புரண்டு சண்டையிட்டனர். உடனே சக பயணிகளும், விமான பணிப்பெண்களும் இருவரையும் விலக்கி விட்டனர். ஆனாலும் சண்டை தொடர்ந்தது. இதனையடுத்து விமானி, ‘நீங்கள் சமாதானம் ஆகாவிட்டால் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்படுவீர்கள்’ என்று எச்சரித்தார். அதற்கு பின்னரும் சண்டை நீடித்தது.

இந்த நேரத்தில் விமானம், சென்னை வான் எல்லைப் பகுதியில் பறந்து கொண்டு இருந்தது. இதனையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு விமானத்தை தரையிறக்க விமானி அனுமதி கேட்டார்.

சென்னையில் தரையிறங்கியது

உடனடியாக அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, விமானம் சென்னையில் தரையிறங்கியது. விமான நிலைய அதிகாரிகள், மத்திய தொழிற்படையினர் விமானத்தில் இருந்து தம்பதியை கீழே இறக்கி குடியுரிமை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த விமானம் 282 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.

இந்தியா வர ஈரான் தம்பதிக்கு விசா இல்லாததால், இருவரிடமும் குடியுரிமை அதி காரிகள் விசாரித்தனர். சிறிது நேரம் கழித்து சமாதானம் அடைந்த தம்பதி, தங்களை பாலி தீவுக்கு அனுப்பி விடுமாறு கேட்டுக்கொண்டனர். இதுகுறித்து டெல்லி ஈரான் தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இருவரும் மலேசியா சென்ற விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். 

Next Story