கோட்டைப்பட்டினம் ராவுத்தர் அப்பா தர்காவில் கந்தூரி விழா


கோட்டைப்பட்டினம் ராவுத்தர் அப்பா தர்காவில் கந்தூரி விழா
x
தினத்தந்தி 12 Nov 2017 4:00 AM IST (Updated: 12 Nov 2017 12:56 AM IST)
t-max-icont-min-icon

கோட்டைப்பட்டினத்தில் உள்ள ராவுத்தர் அப்பா தர்காவில் கந்தூரி விழா நடைபெற்றது.

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தில் ராவுத்தர் அப்பா தர்கா உள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்ற தர்கா ஆகும். நாள்தோறும் இங்கு பிரார்த்தனை செய்வதற்காக வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பல்வேறு மக்கள் வந்து செல்கின்றனர். இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா விமர்சையாக கொண்டாடப்படும். அதேபோல இந்த ஆண்டு கடந்த மாதம் 25-ந்தேதி கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பின்னர் அன்னதானம் நடந்தது. பின்னர் இரவு வர்த்தக சங்கம் சார்பில் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தர்காவில் தினத்தோறும் குர்ஆன் ஓதப்பட்டது. பின்னர் கந்தூரி நாளான 10-வது நாள் மழை பெய்ததால் கந்தூரி விழா கமிட்டியாளர்கள், விழாவை நவம்பர் 11-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர். அதன்படி நேற்று கந்தூரி விழா தொடங்கியது. விழாவை யொட்டி அமைக்கப் பட்ட சந்தனக்கூடு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கூட்டு கொட்டையில் இருந்து நாட்டியக்குதிரை நடனம், தாரை தப்பட்டை முழங்க அதிநவீன வாண வேடிக்கையுடன் முக்கிய வீதி வழியாக தர்காவை வந்தடைந்தது. தொடர்ந்து ராவுத்தர் அப்பா சமாதிக்கு சந்தனம் பூசப்பட்டு துவா ஓதப்பட்டது. இதில் முஸ்லிம்கள் உள்பட அனைத்து சமூகத்தினரும் கலந்து கொண்டனர். பின்னர் இரவு விசைப்படகு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

மதநல்லிணக்க விழா

இந்த கந்தூரி விழாவை மதநல்லிணக்க விழாவாக காலங்காலமாய் கொண்டாட பட்டு வருகிறது. இந்த கந்தூரி விழாவில் முதல் நாள் மண்டகப்படியை மகாலிங்க பக்தரும், மாரியப்ப பக்தர் குடும்பத்தினரும் பல ஆண்டுகளாக செய்து வருகின்றனர். சந்தனக்கூடு செல்லும்போது வெளிச்சத்துக்காக இரளிவயல் கிராமத்தை சேர்ந்தவர்கள் தீ பந்தத்தை ஏந்தி செல்லும் வழக்கம் இருந்து வருகிறது. சந்தனக்கூடு ஊர்வலத்தையொட்டி தர்காவின் பரா மரிப்பு வேலைகள் அனைத்தும் அதனை சுற்றியுள்ள அனைத்து கிராம மக்கள் செய்திருந்தனர்.

மேலும் இந்த தர்காவிற்கு அருகே ஒரு முனியய்யா கோவில் உள்ளது. ராவுத்தர் அப்பாவும், முனியய்யாவும் உற்ற தோழர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் தர்காவை எவ்வாறு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டதோ, அதேபோல முனியய்யா கோவிலும் அலங்கரிக்கப்பட்டது. கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தர்காவுக்கும் சென்று விட்டு தான் செல்கின்றனர். இந்த கந்தூரி விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பிரார்த் தனை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கந்தூரி கமிட்டியாளர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கோட்டைப்பட்டினம் போலீசார் செய்திருந்தனர். 

Related Tags :
Next Story