மணலியில் கன்டெய்னர் லாரி மோதி மெக்கானிக் பலி
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா ஏரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்குமார்(வயது 31).
திருவொற்றியூர்,
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா ஏரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்குமார்(வயது 31). ஜெனரேட்டர் மெக்கானிக். இவர், மணலியில் தங்கி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மணலியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஜெனரேட்டர் பழுது பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினார்.
மணலி விரைவு சாலையில் டி.பி.எல். கம்பெனி அருகே சென்ற போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த மோகன்குமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அப்போது அந்த வழியாக ரோந்து வந்த திருவொற்றியூர் போலீஸ் உதவி கமிஷனர் திருவேங்கடம், இதுபற்றி மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக போலீசார் விரைந்து சென்று பலியான மோகன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.