கவர்னர் கிரண்பெடி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்; அமைச்சர் கந்தசாமி


கவர்னர் கிரண்பெடி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்; அமைச்சர் கந்தசாமி
x
தினத்தந்தி 22 Nov 2017 5:15 AM IST (Updated: 22 Nov 2017 5:55 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களின் எதிர்ப்பு வலுப்பதால் கவர்னர் கிரண்பெடி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கந்தசாமி வேண்டுகோள் விடுத்தார்.

புதுச்சேரி,

புதுவை அரசின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சாரத்தில் உள்ள அலுவலகத்தில் சிறுபான்மையினர் தினவிழா நேற்று நடந்தது. இயக்குனர் சாரங்கபாணி வரவேற்றுப் பேசினார். விழாவில் சிறுபான்மை சமூக பிரதிநிதிகளை அமைச்சர் கந்தசாமி கவுரவித்தார். அப்போது அவர் பேசியதாவது:–

மக்களுக்கு பணி செய்யத்தான் நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். மக்கள் நல திட்டங்கள் தொடர்பாக நான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கவர்னரை சந்தித்து 2 மணிநேரம் பேசினேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த சட்டத்தில் எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதன்படி செயல்படுத்த வேண்டும். கவர்னர், முதல்–அமைச்சர் இருவரில் யார் சொல்வதை கேட்பது என்று அதிகாரிகள் தவிக்கின்றனர். புதுவை சிறிய மாநிலமாக இருந்தாலும் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டான மாநிலம்.

கவர்னரிடம் எது பேசினாலும் முடியாது என்று கூறுகிறார். மக்களுக்கு செய்ய அவருக்கு மனமில்லை. குப்பை வாரி, ஏரிகளை பார்வையிட்டால் மட்டும் ஏற்றம் வராது. இப்போது கவர்னர் எங்கு சென்றாலும் மக்கள் அவரை மறிக்கத் தொடங்கி உள்ளனர். எனவே கவர்னர் தனது நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–

மக்கள் நல திட்டங்களை கவர்னர் கிரண்பெடி தொடர்ந்து தடுத்து வருகிறார். இதுதொடர்பாக ஜனாதிபதியை பார்த்து புகார் தெரிவித்தேன். அதன்பின் கடிதம் கொடுத்து என்னை அழைத்தார். அதைத்தொடர்ந்து 2 மணிநேரம் கவர்னரிடம் பேசினேன். ஆனால் அவர் எதற்கும் ஒப்புதல் அளிக்கவில்லை.

விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன் ரூ.21 கோடியை தள்ளுபடி செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் அந்த கோப்பினையும் வைத்து இன்னும் ஆய்வு செய்கிறார். உள்துறை அனுமதி அளித்தபிறகும் அதை தடுப்பது தவறானது.

புதுவை கவர்னர் கிரண்பெடி மத்திய உள்துறையையும் மதிப்பதில்லை. புதுவை அமைச்சரவையையும் மதிப்பதில்லை. இதேபோல்தான் 7 எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவி விவகாரத்திலும் செய்தார். கவர்னரைப்பற்றி முழுமையாக மக்களுக்கு தெரிந்துவிட்டது. அவர் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை மதிக்காமல் தொடர்ந்து நாடகம் நடத்தி வருகிறார்.

கவர்னரின் நடவடிக்கை பற்றி தெரிவிக்க பிரதமரை சந்திக்க அனுமதிகேட்டு நமது முதல்–அமைச்சர் 3 முறை கடிதம் எழுதியுள்ளார். ஆனால் இதுவரை நேரம் ஒதுக்கித்தரவில்லை. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது.

இவ்வாறு அமைச்சர் கந்தசாமி கூறினார்.

இதற்கிடையே நேற்று தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் அமைச்சர் கந்தசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது அமைச்சர் கந்தசாமி வகித்து வரும் துறைகளில் கிடப்பில் உள்ள திட்டங்களை செயல்படுத்தவது குறித்து அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.


Next Story