ஊராட்சி செயலாளர்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்த போராட்டம்


ஊராட்சி செயலாளர்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 24 Nov 2017 4:15 AM IST (Updated: 24 Nov 2017 1:07 AM IST)
t-max-icont-min-icon

பனமரத்துப்பட்டி, தலைவாசல், ஓமலூர், வாழப்பாடி பகுதிகளில் ஊராட்சி செயலாளர்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பனமரத்துப்பட்டி,

கிராம ஊராட்சி அலுவலகங்களில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களுக்கு, இளநிலை உதவியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்துக்கு இணையாக ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகங்களில் உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஒன்றிய அலுவலக பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஊழியர்களின் உள்ளிருப்பு போராட்டத்தால் பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகத்திலும், ஒன்றியத்திற்கு உட்பட்ட 20 கிராம ஊராட்சிகளிலும் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.

தலைவாசல் ஊராட்சியில் உள்ள ஊராட்சி செயலாளர்கள் மற்றும் தலைவாசல் ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலக பணியாளர்களும் நேற்று உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவலக பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

இதனால் பொதுமக்கள் அரசு சலுகைகள் பெற ஒன்றிய அலுவலகம் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஒன்றிய அலுவலகத்திலும் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த போராட்டத்தால் தலைவாசல் பகுதியில் 35 ஊராட்சி அலுவலகமும், ஒன்றிய அலுவலகமும் வெறிச்சோடி காணப்பட்டது.

ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தமிழக ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க வட்டார செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் கோவிந்தராஜி, மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளின் செயலாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலவலகத்திலும் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் காடையாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சொக்கலிங்கம், எழிலரசி, வட்ட கிளை தலைவர் சரவணன், வட்டகிளை செயலாளர் செந்தில் உள்பட ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளின் செயலாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் குமார் நன்றி கூறினார்.

வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த உள்ளிருப்பு போராட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாலினி, செந்தில்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பராயன், லோகாம்பாள் மற்றும் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் உள்பட ஊராட்சி செயலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story