திருப்பூரில் இருந்து தேனிக்கு கஞ்சா கடத்தி வந்தவர் சிக்கினார்

திருப்பூரில் இருந்து தேனிக்கு 10 கிலோ கஞ்சா கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர். ஆட்டோ டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
தேனி,
திருப்பூரில் இருந்து தேனிக்கு ஒரு பஸ்சில் கஞ்சா கடத்தி வரப்பட்டுள்ளதாகவும், அதை ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு இருப்பதாகவும் தேனி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் போலீசார் தேனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிவாஜி நகர் செல்லும் சாலையில் வாகன சோதனை செய்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை போலீசார் மறித்தனர். போலீசாரை பார்த்ததும் ஆட்டோவை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடியுள்ளார். ஆட்டோவில் வந்த மற்றொரு நபரும் தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர். ஆட்டோ டிரைவர் போலீசிடம் சிக்காமல் தப்பிச் சென்று விட்டார்.
ஆட்டோவை சோதனை செய்த போது, அதில் ஒரு சாக்கு மூட்டையில் 10 கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சாவையும், ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்திய போது அவர் திருப்பூர் செல்லம்பாளையம் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் கதிர்ராஜா (வயது 45) என்பதும், தப்பி ஓடியவர் வருசநாடு அருகே உள்ள குமணன்தொழுவை சேர்ந்த பரமன் மகன் சுந்தர்தேவா (27) என்பதும் தெரியவந்தது.
இதில், கதிர்ராஜா சொந்த ஊர் குமணன்தொழு. சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூருக்கு வேலைக்கு சென்றவர் அங்கேயே தங்கி விட்டார். அங்கு இருந்தபடி ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, தேனி பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். அந்த வகையில் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த கஞ்சாவை திருப்பூரில் பதுக்கி வைத்து, திருப்பூரில் இருந்து பஸ் மூலம் தேனிக்கு கடத்தி வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிர்ராஜாவை கைது செய்தனர். தப்பிச் சென்ற சுந்தர்தேவாவை தேடி வருகின்றனர். பிடிபட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.