100 தொகுதிகளில் நான் பயணம் மேற்கொள்ள முடிவு 124 தொகுதிகளில் சித்தராமையா சுற்றுப்பயணம் பரமேஸ்வர் பேட்டி


100 தொகுதிகளில் நான் பயணம் மேற்கொள்ள முடிவு 124 தொகுதிகளில் சித்தராமையா சுற்றுப்பயணம் பரமேஸ்வர் பேட்டி
x
தினத்தந்தி 8 Dec 2017 2:45 AM IST (Updated: 8 Dec 2017 2:13 AM IST)
t-max-icont-min-icon

நான் 100 தொகுதிகளிலும், சித்தராமையா 124 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம் என்று பரமேஸ்வர் கூறினார்.

பெங்களூரு,

நான் 100 தொகுதிகளிலும், சித்தராமையா 124 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம் என்று பரமேஸ்வர் கூறினார்.

ஆலோசனை கூட்டத்தை...

சட்டசபை தேர்தலையொட்டி கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் கடந்த 3 நாட்களாக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளை வரவழைத்து ஆலோசனை நடத்தினார். சட்டசபை தேர்தல் நெருங்குவதால், மற்ற வேலைகளை விட்டுவிட்டு கட்சியை பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபடும்படி அறிவுறுத்தினார். காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் நாங்கள் கடந்த 3 நாட்களாக ஆலோசனை கூட்டத்தை நடத்தினோம். தேர்தலுக்கு தயாராகும்படி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். தேர்தலில் வெற்றி பெற தந்திரத்தை வகுக்கும்படி கூறினோம். பூத் மட்டத்தில் குழுக்களை அமைக்குமாறு கூறி இருக்கிறோம். முதல் முறையாக 54 ஆயிரத்து 271 வாக்குச்சாவடிகளில் குழுக்களை அமைத்து இருக்கிறோம்.

மக்களிடையே நல்ல வரவேற்பு

ஒவ்வொரு குழுவுக்கும் தலைவர், துணைத்தலைவர், ஏஜெண்டுகளை நியமித்து உள்ளோம். இந்த குழு விவரங்கள் அடங்கிய பட்டியலை தாசில்தார்களிடம் தாக்கல் செய்துள்ளோம். எங்கள் கட்சியில் எடுக்கும் முடிவுகள் அனைத்து பூத் குழுக்களிலும் அமல்படுத்துவோம். மாநில அரசின் சாதனைகளை வீடு, வீடாக சென்று எடுத்துக் கூறும் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை ஆய்வு செய்கிறோம். இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பொய் சொல்லாமல் சாதனை புத்தகம் மூலம் அரசின் சாதனைகளை மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளோம். 1.10 கோடி குடும்பங்களுக்கு இந்த சாதனை புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. வருகிற 28–ந் தேதி காங்கிரஸ் நிறுவன தினத்தையொட்டி பூத் குழுக்கள் கட்சி கொடியை ஏற்றும். அன்றைய தினம் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபயணம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளோம்.

தேதி முடிவு செய்யவில்லை

சித்தராமையா 124 தொகுதிகளில் அரசு சார்பில் சுற்றுப்பயணம் செய்கிறார். மீதமுள்ள 100 தொகுதிகளில் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் இல்லை. அந்த தொகுதிகளில் நான் சுற்றுப்பயணம் செய்து கட்சியை பலப்படுத்தும் பணியை மேற்கொள்ள உள்ளேன். இந்த சுற்றுப்பயணம் எங்கள் கட்சி சார்பில் நடைபெறும். இன்னும் தேதி முடிவு செய்யவில்லை.

வேட்பாளர்களை தேர்வு செய்ய விரைவில் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். ராகுல் காந்தி கர்நாடகத்திற்கு வர உள்ளார். அவர் வந்து சென்ற பிறகு எங்கள் சுற்றுப்பயணத்தை தொடங்குவோம்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.


Next Story