அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரத்திற்கு மேல் ஆனது.
திருவண்ணாமலை,
இந்த ஆண்டிற்கான மகா தீபம் கடந்த 2–ந் தேதி ஏற்பட்டது. இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் ஏற்றப்படும். அதாவது மலை உச்சியில் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை மகா தீபம் காட்சி அளிக்கும். இதற்கு தேவையான நெய், திரி போன்றவை தினமும் காலையில் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
மகா தீபத்தின் போது அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் இந்த 11 நாட்களில் ஒருநாள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு, மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தையும் பார்த்துவிட்டு செல்வார்கள். இதனால் தற்போது கோவிலில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. மேலும் கார்த்திகை மாதம் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் அய்யப்ப பக்தர்கள் கூட்டமும் அதிகளவில் உள்ளது.இந்த நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். ரூ.50, ரூ.20 கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனம் செல்லும் வரிசையில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு இருந்தது. கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story