மொழித்தடையை உடைக்கும் அப்ளிகேசன்கள் -ஒரு பார்வை


மொழித்தடையை உடைக்கும் அப்ளிகேசன்கள் -ஒரு பார்வை
x
தினத்தந்தி 12 Dec 2017 1:38 PM IST (Updated: 12 Dec 2017 1:38 PM IST)
t-max-icont-min-icon

உலகம் சுற்றுபவர், மொழி பயிலுபவர், வணிகர், ஆராய்ச்சியாளர் என பலருக்கும் கைகொடுக்கக் கூடியவை மொழிபெயர்ப்பு அப்ளிகேசன்கள்.

ணைய வசதியால் பரந்து விரிந்த உலகம் இதயம்போல கைப்பிடி அளவுக்குள் சுருங்கிவிட்டாலும், உலக மொழிகளே சற்று தடையை ஏற்படுத்துகின்றன. இந்த தடையையும் தாண்டி உலகம் ஒரு கோலிக் குண்டு என்ற இலக்கை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது மொழி மாற்ற வசதிகள்.

இன்று பல்வேறு விதங்களில் மொழி பெயர்ப்பு அப்ளிகேசன்களும், கருவிகளும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அவற்றில் உலக அளவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் கூகுள் டிரேன்ஸ்லேட் வசதியும், மைக்ரோசாப்டின் டிரான்ஸ்லேட்டர் வசதியும் குறிப்பிடத்தக்கவை. இந்த இரண்டு மொழி பெயர்ப்பு அப்ளிகேசன்களும் பயன்பாட்டிற்கு வந்து பல ஆண்டுகளாகிவிட்டாலும், மைக்ரோசாப்ட் நிறுவனம் மொழிபெயர்ப்பு அப்ளிகேசனில் புதிய மைல்கல் சாதனையை எட்டி உள்ளது. அது பல விதங்களில் கூகுளை பின்னுக்குத்தள்ளி உலக வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கூகுள்- மைக்ரோசாப்ட் டிரான்ஸ்லேட்டர் வசதிகள் பற்றிய ஒரு ஒப்பீடு இங்கே...

இரு அப்ளிகேசன்களிலும் பொதுவாக உள்ள மொழி பெயர்ப்பு வசதிகள் இவைதான்.

1. தட்டச்சு செய்து தேடலாம்,

2. தொடுதிரையில் விரலால் எழுதி தேடலாம்,

3. பேசுவதன் மூலமும் மொழி பெயர்ப்பு வசதியை பயன் படுத்தலாம்,

4. கட்டுரையை படம் பிடித்து மொழி பெயர்ப்பு கொடுக்கலாம்,

5. கிளிக் செய்யாமல் கேமராவால் காண்பித்த படியே (தகவல் பலகைகளின்) மொழிபெயர்ப்பை அறியலாம்,

6. இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் ஆப்லைன் சேவையிலும் மொழிமாற்ற வசதியைப் பெறலாம்.

கூடுதல் சிறப்பம்சமாக நிகழ்நேர வீடியோ மொழிமாற்றத்தை மைக்ரோசாப்ட் டிரான்ஸ்லேட்டர் வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல் ‘கான்வர்சேசன் மோடு’ எனும் சிறப்பு சேவையும் மைக்ரோசாப்டிடம் உள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்தி, ஒருவர் போனில் பேசும்போதே அந்த உரையாடலை நமது மொழியில் மாற்றிக் கேட்கலாம். இது வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்திய வசதியாகும். கூகுள் நிறுவனம் டாக் என்ற தனி சேவையில் இந்த வசதியை வழங்கினாலும், அது வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவதாக அமையவில்லை.

ஆனால் கூகுள் டிரான்ஸ்லேட் அப்ளிகேசன் 103 உலக மொழிகளில் மொழிபெயர்க்கக் கூடிய சேவையை வழங்கி முன்னிலை பெறுகிறது. மைக்ரோசாப்ட் டிரான்ஸ்லேட்டர் அப்ளிகேசன் 54 மொழிகளில் மொழிமாற்றம் செய்யும் வசதியை வழங்குகிறது. மொழிமாற்றம் என்பது எத்தனை மொழிகளுக்கானது என்பதைவிட எவ்வளவு வேகமாக, எவ்வளவு சரியாக மொழி பெயர்ப்பு வழங்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே சிறப்பைப் பெறுகிறது என்பதால் எண்ணிக்கை இரண்டாம்பட்சமாகிறது.

கூகுள் நிறைய மொழியில் சேவை வழங்கினாலும், அனேக மொழிச் சேவையில் எழுத்துகளை மொழி பெயர்க்க மட்டுமே பயன்படுகிறது. சில முக்கிய மொழிகளில்தான் பேச, எழுத, படம் பிடிக்க, ஆப்லைன் சேவை என ஏராளமான வசதிகளை வழங்குகிறது. ஆனால் மைக்ரோசாப்ட் அப்ளிகேசனில் 54 மொழிச் சேவையில் 44 மொழிச் சேவையில் அனைத்து வசதிகளும் உள்ளன. பேச, எழுத, உரையாடலை மொழிபெயர்க்க, படமொழி பெயர்ப்பை அறிய என அனைத்தையும் பெறலாம். இவற்றை ஆப்லைனிலும் பெற முடியும். ஆனால் கூகுள் வெகுசில மொழிகளையே ஆப்லைனில் வழங்குகிறது. ஆக கூகுள் நிறைய வழங்கும் சேவையை, மைக்ரோசோப்ட் குறைந்த மொழிகளில் வழங்கினாலும் தரமாக, நேர்த்தியுடன் வழங்கி முன்னிலை பெற்றுவிடுகிறது.

கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் இரண்டின் மொழி மாற்ற சேவையும் அதனதன் இணைய உலவியுடன் இலவச இணைப்பாகவே உள்ளது. ஆண்ட்ராய்டு, ஐபோன் இயங்குதளங்களிலும் இது செயல்படும். கூடுதல் சிறப்பம்சமாக மைக்ரோசாப்ட்டின் மொழிமாற்று அப்ளிகேசன், ஆப்பிள் வாட்ச், ஆண்ட்ராய்டு அணிகருவிகளிலும் செயல்படுகிறது. மைக்ரோசாப்ட் அப்ளிகேசன்களான ஆபீஸ், ஸ்கைப், விஷூவல் ஸ்டூடியோ ஆகியவற்றிலும் மொழிமாற்ற சேவையை பயன்படுத்த முடிவது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.

மைக்ரோசாப்ட் மொழிமாற்ற வசதியை தற்போதைய நிலையில் தமிழ், வங்காளம், இந்தி போன்ற மொழிகளில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் வழங்கும் பிற சேவைகளின் ஈர்ப்பால், அது பிரபலமானதாக முன்னே நிற்கிறது. மைக்ரோசாப்ட் தனது தரத்தினால் போட்டியில் நிலைத்து நிற்கிறது. 

Next Story