முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு செய்ய வந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை துணை கமாண்டருக்கு அனுமதி மறுப்பு

முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு செய்ய வந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை துணை கமாண்டருக்கு வனத்துறையினர் அனுமதி மறுத்தனர்.
குமுளி,
தமிழக–கேரள எல்லைப்பகுதியில் முல்லைப்பெரியாறு அணை உள்ளது. இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்டங்கள் பயன் பெறுகின்றன. இந்த அணையில் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும், அணையில் துணை ராணுவத்தை நியமிக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதேநேரத்தில் அணையில் பாதுகாப்பு பணியில் 124 போலீசாருடன் போலீஸ் நிலையம் செயல்படுவதாகவும், அணை பாதுகாப்பாக உள்ளதாகவும் கேரள அரசு கூறுகிறது. எனவே அணையில் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவம் தேவையில்லை என்று முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் முல்லைப்பெரியாறு அணையில் ஆண்டுதோறும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி நேற்று அணையில் ஆய்வு செய்வதற்காக மத்திய தொழிற்பாதுகாப்பு படை எர்ணாகுளம் பிரிவு துணை கமாண்டர் ஜோக்ராஜ் வந்தார். இதற்காக தேக்கடியில் தமிழக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான படகில் அணைக்கு செல்ல முயன்றார். அவருடன் தமிழக பொதுப்பணித்துறை என்ஜினீயர் ராஜகோபால் உள்பட அதிகாரிகளும் உடன் வந்தனர்.
அப்போது அங்கு கேரள வனத்துறை மற்றும் போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அணைக்கு செல்லும் உத்தரவு நகலை காட்டும் படி கூறினர். ஆனால் அவர் உத்தரவு நகலை எடுத்து வரவில்லை என்று கூறியுள்ளார். அணையில் ஆய்வு செய்ய செல்லும்போது உத்தரவு நகல் இருக்க வேண்டும் என்றும், இல்லையெனில் ஆய்வு செய்வதற்கு அனுமதிக்க முடியாது என்று வனத்துறையினர் கூறியுள்ளனர். நீண்ட நேரம் பேசி பார்த்தும் வனத்துறையினர் தங்கள் பிடிவாதத்தில் இருந்து பின்வாங்கவில்லை.
இதனால் அவர் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் திரும்ப சென்றார். பின்னர் துணை கமாண்டர் ஜோக்ராஜ்,அனுமதி கடிதம் பெறுவதற்காக இடுக்கி போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபாலை சந்தித்து முறையிட்டுள்ளார். ஆனால் அவரும் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் அணையை ஆய்வு செய்யாமல் திரும்ப சென்றார்.
முல்லைப்பெரியாறு அணைக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் உள்ளதாகவும், எனவே அணையில் துணை ராணுவத்தினரை பாதுகாப்பு பணியில் நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது.
ஆனால் முல்லைப்பெரியாறு அணையில் அனைத்து போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதில்லை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அணையில் ஆய்வு செய்தால் போலீசார் குறித்த விவரம் வெட்ட வெளிச்சமாகி விடும் என்பதற்காக கேரள வனத்துறையினர் அனுமதி மறுத்ததாக பொதுப்பணித்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.