என்னைப்பற்றி பேச சித்தராமையாவுக்கு அருகதை கிடையாது மகதாயி நதியில் விரைவில் தண்ணீர் பாய்ந்தோடும் எடியூரப்பா பேச்சு

என்னைப்பற்றி பேச சித்தராமையாவுக்கு அருகதை கிடையாது என்றும், மகதாயி நதியில் விரைவில் தண்ணீர் பாய்ந்தோடும் என்றும் எடியூரப்பா கூறினார்.
உப்பள்ளி,
என்னைப்பற்றி பேச சித்தராமையாவுக்கு அருகதை கிடையாது என்றும், மகதாயி நதியில் விரைவில் தண்ணீர் பாய்ந்தோடும் என்றும் எடியூரப்பா கூறினார்.
மாற்றத்திற்கான பயணம்பா.ஜனதா மாநில தலைவரும், முன்னாள் முதல்–மந்திரியுமான எடியூரப்பா பரிவர்த்தனா யாத்திரை(மாற்றத்திற்கான பயணம்) என்ற பெயரில் கர்நாடகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இவ்வாறாக அவர் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு பா.ஜனதாவுக்கு ஆதரவை திரட்டி வருகிறார். இந்த நிலையில் நேற்று அவர் தார்வார்–உப்பள்ளி இரட்டை மாநகரத்திற்கு சென்றார்.
உப்பள்ளி டவுன் கித்தூர் ராணி சென்னம்மா சர்க்கிளில் இருந்து பரிவர்த்தனா யாத்திரை ஊர்வலம் புறப்பட்டது. எடியூரப்பா தலைமையில் புறப்பட்ட இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பா.ஜனதா தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் நேராக உப்பள்ளி டவுன் ஜே.சி. நகரில் உள்ள நேரு விளையாட்டு அரங்கை சென்றடைந்தது. அங்கு பா.ஜனதா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு உத்தரபிரதேச முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
விவசாயக்கடன் தள்ளுபடிகர்நாடக மாநிலம் அனுமான் பிறந்த பூமி. உப்பள்ளி, சித்தோரோடசாமி பிறந்த பூமி. இந்த மண்ணில் நான் நிற்பதில் பெருமை அடைகிறேன். மக்கள் அனைவரையும் அனுமானையும், சித்தோரோடசாமியையும் வணங்குங்கள். திப்பு சுல்தானை வணங்காதீர்கள். கர்நாடகத்தில் எடியூரப்பா ஆட்சி சிறப்பாக இருந்தது. அதை காங்கிரசார் சூழ்ச்சி வலையில் வீழ்த்தி ஆட்சியை பிடித்து விட்டார்கள்.
கர்நாடகத்தில் விவசாயிகள் பிரச்சினை, குடிநீர் பிரச்சினை, சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஆகியவை இன்னும் தீரவில்லை. நான் உத்தரபிரதேசத்தில் முதல்–மந்திரியாக பதவி ஏற்றதும் விவசாயக்கடன் ரூ.36 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்தேன். உத்தரபிரதேசம் இந்தியாவிலேயே பெரிய மாநிலம். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் வரவு–செலவு அதிகம் உள்ள மாநிலம்.
அப்படி இருந்தும் நான் விவசாயக்கடன்களை ரத்து செய்தேன். அங்கு பா.ஜனதா ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. கர்நாடக பா.ஜனதா தலைவர்களுடைய முயற்சியின்பேரில், கர்நாடகத்திற்கு புதிய ஏர்போர்ட், நெடுஞ்சாலைகள் சீரமைப்பு, ஐ.ஐ.டி., ஸ்மார்ட் சிட்டி திட்டம் போன்றவை வந்துள்ளன. அதனால் மக்கள் பா.ஜனதாவை ஆதரிக்க வேண்டும். மீண்டும் கர்நாடகத்தை பா.ஜனதாவின் கையில் மக்கள் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவா முதல்–மந்திரிஇதையடுத்து கூட்டத்தில் எடியூரப்பா பேசும்போது கூறியதாவது:–
மகதாயி நதிநீர் பிரச்சினை குறித்து பேச எடியூரப்பா யார்? என்று சித்தராமையா கேள்வி எழுப்பி உள்ளார். என்னைப்பற்றி பேச அவருக்கு அருகதை கிடையாது. எங்கள் முயற்சியால் தற்போது கோவா முதல்–மந்திரி மகதாயி நதியில் 7.56 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) தண்ணீரை திறந்து விடுவதாக கூறி உள்ளார். அதுபற்றி எனக்கு கடிதம் எழுதி உள்ளார்(இதையடுத்து எடியூரப்பா அந்த கடிதத்தை படித்துக் காண்பித்தார்).
கடிதத்தில் மகதாயி நதியில் தண்ணீர் திறந்து விட நான் யாரையும் கேட்கவில்லை என்றும், அதுபற்றி நானே சொந்தமாக முடிவு எடுப்பேன் என்றும், தண்ணீர் திறந்து விடுவது பற்றி மந்திரிகளிடம் பேசி ஆலோசனை நடத்தி விரைவில் அதற்கான அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் கோவா முதல்–மந்திரி உறுதி அளித்திருக்கிறார்.
பல திட்டங்களை செயல்படுத்துவோம்மேலும் அந்த தண்ணீரை குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்தும்படி அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். கோவா முதல்–மந்திரியின் இந்த முடிவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது பா.ஜனதாவினரால் நடந்தது. காங்கிரசாரால் அல்ல. மகதாயி நதியில் விரைவில் கண்டிப்பாக தண்ணீர் பாய்ந்தோடும்.
இதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் இருந்தே மக்களுக்காகத்தான் பா.ஜனதா பாடுபடுகிறது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். பா.ஜனதாவின் கரத்தை வலுப்படுத்தி ஆட்சியை கையில் தந்தால் இன்னும் பல திட்டங்களை கர்நாடகத்தில் செயல்படுத்துவோம். இது உறுதி.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
இதையடுத்து பா.ஜனதா தலைவர்கள் ஈசுவரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், பிரகலாத் ஜோஷி உள்பட பலர் பேசினர். அனைவரும் மகதாயி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால் இனிமேல் மகதாயி நதிநீர் பிரச்சினைக்காக போராட்டத்தில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று கூறினர்.