மகதாயி பிரச்சினை: கோவா முதல்–மந்திரிக்கு சித்தராமையா கடிதம் ‘பேச்சுவார்த்தைக்கு தேதியை முடிவு செய்யுங்கள்’


மகதாயி பிரச்சினை: கோவா முதல்–மந்திரிக்கு சித்தராமையா கடிதம் ‘பேச்சுவார்த்தைக்கு தேதியை முடிவு செய்யுங்கள்’
x
தினத்தந்தி 23 Dec 2017 3:00 AM IST (Updated: 23 Dec 2017 1:14 AM IST)
t-max-icont-min-icon

மகதாயி நதிநீர் பிரச்சினையில் கோவா முதல்–மந்திரிக்கு சித்தராமையா கடிதம் எழுதினார். பேச்சுவார்த்தைக்கு விரைவாக தேதியை முடிவு செய்யுமாறு அவர் கூறி இருக்கிறார்.

பெங்களூரு,

மகதாயி நதிநீர் பிரச்சினையில் கோவா முதல்–மந்திரிக்கு சித்தராமையா கடிதம் எழுதினார். பேச்சுவார்த்தைக்கு விரைவாக தேதியை முடிவு செய்யுமாறு அவர் கூறி இருக்கிறார்.

மகதாயி நதி நீர் பிரச்சினை தொடர்பாக கோவா முதல்–மந்திரி மனோகர் பாரிக்கருக்கு, கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையா நேற்று ஒரு கடிதம் எழுதினார். அதில் கூறி இருப்பதாவது:–

அந்த கடிதத்தை படித்தேன்

மகதாயி நதிநீர் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கடந்த மே மாதம் 24–ந் தேதி உங்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். பேச்சுவார்த்தைக்கான தேதி மற்றும் இடத்தை முடிவு செய்யுமாறு கூறினேன். இதே தகவலை மராட்டிய மாநில முதல்–மந்திரிக்கும் கடிதம் மூலம் தெரிவித்தேன். இருந்தாலும் துரதிருஷ்டவசமாக உங்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

இந்த நிலையில் தாங்கள் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பாவுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு கடிதம் எழுதி, பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. கடந்த 20–ந் தேதி எழுதப்பட்டதாக குறிப்பிடப்பட்ட அந்த கடிதம் சமூக வலைத்தளங்களிலும் தீவிரமாக பரவியது. நானும் அந்த கடிதத்தை படித்தேன்.

விரைவாக முடிவு செய்யுங்கள்

மகதாயி நடுவர் மன்றம் கூறிய ஆலோசனைப்படி பேச்சுவார்த்தை குறித்து நான்தான் உங்களுக்கு கடிதம் எழுதினேன். எதுவாக இருந்தாலும் பரவாயில்லை(எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதியதை குறிப்பிடுகிறார்), நான் மீண்டும் ஒரு முறை உங்களை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். இந்த பிரச்சினைக்கு சம்பந்தமான கர்நாடகம், மராட்டியம், கோவா ஆகிய மூன்று மாநிலங்களின் முதல்–மந்திரிகளாகிய நாம் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி ஒரு சுமூக தீர்வு காண்போம்.

இந்த பேச்சுவார்த்தைக்கு தேதி மற்றும் இடத்தை உங்களின் வசதிக்கு ஏற்ப முடிந்தவரை விரைவாக முடிவு செய்யுங்கள். எங்கு, எப்போது கூட்டத்தை கூட்டினாலும் அதில் கலந்துகொள்ள நான் தயாராக இருக்கிறேன். இந்த தகவலை மராட்டிய முதல்–மந்திரிக்கும் தெரிவிக்கிறேன். இது மிக அவசரம். ஏனென்றால் நடுவர் மன்றம் இறுதிக்கட்ட விசாரணையை பிப்ரவரி மாதம் 6–ந் தேதியில் இருந்து 22–ந் தேதி வரை நடத்துவதாக அறிவித்துள்ளது.

குடிநீருக்கு தேவைப்படுகிறது

மகதாயி நதியில் கர்நாடகம் 14.98 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீருக்கு உரிமை கோருகிறது. இதில் 7.56 டி.எம்.சி. குடிநீருக்கு தேவைப்படுகிறது. மீதமுள்ள 7 டி.எம்.சி. மல்லபிரபா அணைக்கட்டு பகுதியில் வறட்சி பாதித்த பகுதிகளுக்கு தேவைப்படுகிறது.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


Next Story