ஓட்டல்களில் பாலிதீன் இலை, பைகள் பயன்பாடு அதிகரிப்பு கண்டுகொள்ளாத அதிகாரிகள்

மாவட்டத்தில் ஓட்டல்களில் பாலிதீன் இலைகள், பைகள், பேப்பர்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதால், அதனால் சேரும் குப்பைகளை அழிக்க முடியாமல் உள்ளாட்சி அமைப்புகள் திணறி வருகின்றன.
மானாமதுரை,
மானாமதுரை பேரூராட்சியில் ஒரு துப்புரவு ஆய்வாளர், 2 மேஸ்திரிகள், 30 துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். மானாமதுரை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் துப்புரவு பணிகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தினசரி சேரும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, தரம் பிரித்து பேரூராட்சி ஊழியர்கள் அழித்து வருகின்றனர். நகரில் சமீப காலமாக ஓட்டல்களில் பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் இலைகள், பேப்பர்கள் பயன்பாடு அதிகரித்து வருகின்றன. ஓட்டல்களில் மதிய சாப்பாடு, காலை டிபன் உள்ளிட்ட அனைத்துமே பிளாஸ்டிக் பேப்பரில் பரிமாறப்படுகின்றன. வீடுகளுக்கு பார்சல்கள் அனைத்தும் பாலிதீன் பேப்பரில் மடித்து தரப்படுகின்றன. டீ, காபி உள்ளிட்ட அனைத்து உணவுப்பொருட்களும் பாலிதீன் பைகளிலேயே பார்சல் செய்து தரப்படுகின்றன. வர்த்தக நிறுவனங்களில் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது, முக்கியமாக டீ கடைகளில் டீயை பிளாஸ்டிக் பையில் பார்சல் செய்துதர கூடாது என்று கலெக்டர் தடை விதித்தும் ஸ்டிக் பைகளில் டீ ஊற்றி தரப்படுகிறது. பொதுமக்களும் விபரீதம் புரியாமல் வாங்கி செல்கின்றனர்.
மானாமதுரை மட்டுமின்றி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 பேரூராட்சிகள், 3 நகராட்சிகள் மற்றும் 445 ஊராட்சி மன்றங்களிலும் உள்ள சிறியது முதல் பெரியது என ஏராளமான ஓட்டல்களில் அனுமதி மறுக்கப்பட்ட பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் இலைகள், பைகள், பேப்பர்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் சேரும் பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் அகற்ற முடியாமல் திணறி வருகின்றனர்.
அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தியும், ஓட்டல்களில் அதனை மீறி பயன்படுத்தி வருகின்றனர். ஓட்டல் உரிமையாளர்கள் தரப்பில் கூறுகையில், வாழை இலைகள் ஒரு கட்டு(200 இலைகள்) ரூ.300–ல் இருந்து ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் 120 பிளாஸ்டிக் இலைகள் வெறும் ரூ.80. எனவே பிளாஸ்டிக்கை பயன்படுத்துகிறோம் என்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மானாமதுரையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.