ஆர்.கே.நகரில் 2 இடங்களில் நடிகர் கமல்ஹாசனை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


ஆர்.கே.நகரில் 2 இடங்களில் நடிகர் கமல்ஹாசனை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 7 Jan 2018 3:00 AM IST (Updated: 7 Jan 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் கமல்ஹாசனை கண்டித்து சென்னை தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் முன்பு பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராயபுரம், 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்கள் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டதாகவும், இது திருடனிடம் பிச்சை எடுப்பது போன்று கேவலமானது என்றும் நடிகர் கமல்ஹாசன் விமர்சனம் செய்து இருந்தார்.

இதையடுத்து நடிகர் கமல்ஹாசனை கண்டித்து சென்னை தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் முன்பு அப்பர் சாமி தெரு, எம்.ஜி.எம். கார்டன், கோதண்டராமன் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கமலுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர். இதேபோல் புது வண்ணாரப்பேட்டை, அருணாச்சலேஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்த பொதுமக்களும், தங்களை கேவலப்படுத்தியதாக கூறி நடிகர் கமல்ஹாசனை கண்டித்து திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் சமரசம் செய்து கலைந்து போக செய்தனர். 

Next Story