விருத்தாசலத்தில் பஸ் தொழிலாளர்கள் பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு


விருத்தாசலத்தில் பஸ் தொழிலாளர்கள் பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 Jan 2018 4:15 AM IST (Updated: 9 Jan 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் பஸ் தொழிலாளர்கள் பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான 13-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதன் விளைவாக கடந்த 4-ந் தேதி மாலையில் இருந்து பஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது போராட்டம் நேற்று 5-வது நாளாக நீடித்தது.

விருத்தாசலத்தை பொறுத்தமட்டில் நேற்றும் பஸ் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்ந்து. இதில் பஸ் தொழிலாளர்கள் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். அதற்கு போலீசார் அனுமதி அளித்தனர்.

இந்த நிலையில் நேற்று விருத்தாசலம் ஜங்சன் சாலையில் உள்ள 2 பணிமனைகள் முன்பு பஸ் தொழிலாளர்கள் ஒன்று திரண்டனர். பின்னர் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக பாலக்கரை நோக்கி அவர்கள் கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக புறப்பட்டனர். பஸ் தொழிலாளர்களின் திடீர் பேரணியால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இது பற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்தியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஸ் தொழிலாளர்களின் பேரணியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட வேளையில் அனுமதியின்றி பேரணி நடத்தி உள்ளர்கள். எனவே இனி ஆர்ப்பாட்டம் நடத்தவோ, பேரணி நடத்தவோ அனுமதி கிடையாது என்றனர். இதனால் போலீசாருக்கும், பஸ் தொழிலாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போலீசார் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக கூறி அனைவரையும் கைது செய்வோம் என்று எச்சரித்தனர். இதையடுத்து பஸ் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க இன்ஸ்பெக்டர்கள் மங்கலம்பேட்டை ரவிச்சந்திரன், பெண்ணாடம் ராஜா, விருத்தாசலம் ராஜதாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் விருத்தாசலம் பணிமனைகள், பஸ்நிலையம், கடைவீதி, பாலக்கரை ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story