லாரி சக்கரத்தில் சிக்கி வயதான தம்பதி பலி


லாரி சக்கரத்தில் சிக்கி வயதான தம்பதி பலி
x
தினத்தந்தி 12 Jan 2018 4:45 AM IST (Updated: 12 Jan 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லி அருகே மோட்டார்சைக்கிளில் சென்றபோது லாரி மோதியதில் கீழே விழுந்து அதன் சக்கரத்தில் சிக்கி வயதான தம்பதி உயிரிழந்தனர்.

பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த திருமழிசை, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 70). திருமழிசையில் உள்ள கோவிலில் நிர்வாகியாக இருந்து வந்தார். இவரது மனைவி கலைச்செல்வி(60). கணவன்–மனைவி இருவரும் நேற்று தாம்பரத்தை அடுத்த படப்பையில் உள்ள தங்களது மகளின் வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றனர்.

பின்பு இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ஆறுமுகம் ஓட்டினார். பூந்தமல்லி–பெங்களூரு நெடுஞ்சாலை, நசரத்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதனால் இருவரும் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர்.

அப்போது அந்த லாரியின் சக்கரம் ஏறி, இறங்கியதில் கணவன்–மனைவி 2 பேரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே விபத்து ஏற்பட்டதும் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

இந்த விபத்தால் பூந்தமல்லி–பெங்களூரு நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த பகுதியில் சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் காலை, மாலை நேரங்களில் வாகன நெரிசல் ஏற்படுவதாகவும், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும் எனவே சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story