என்.ஆர்.காங்கிரஸ் அரசின் ஊதாரித்தனத்தால் காங்கிரஸ் கூட்டணி அரசு பாதிக்கப்பட்டுள்ளது, சிவா எம்.எல்.ஏ. வேதனை


என்.ஆர்.காங்கிரஸ் அரசின் ஊதாரித்தனத்தால் காங்கிரஸ் கூட்டணி அரசு பாதிக்கப்பட்டுள்ளது, சிவா எம்.எல்.ஏ. வேதனை
x
தினத்தந்தி 14 Jan 2018 4:30 AM IST (Updated: 14 Jan 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

என்.ஆர்.காங்கிரஸ் அரசின் ஊதாரித்தனத்தால் காங்கிரஸ் கூட்டணி அரசு பாதிக்கப்பட்டுள்ளது என்று தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. கூறினார்.

புதுச்சேரி,

புதுவை தெற்கு மாநில தி.மு.க. சார்பில் உருளையன்பேட்டை தொகுதி சார்பில் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட (தை முதல் நாள்) தமிழ் புத்தாண்டு வரவேற்பு பொதுக்கூட்டம் நடந்தது. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் சக்திவேல் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு பொய்யையே மூலதனமாக கொண்டு ஆட்சி நடத்தி வருகின்றது. வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று பகல் கனவு கண்டு வருகின்றனர்.

புதுவையில் நிலவும் நிதி நெருக்கடியால் நடைமுறையில் இருக்கும் திட்டங் களைக்கூட அரசால் தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை. இந்த நிதி நெருக்கடிக்கு இந்த கூட்டணி அரசு காரணமல்ல. பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் என்பதுபோல என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊதாரித்தனத்தால் காங்கிரஸ் கூட்டணி அரசு பாதிக்கப்பட்டுள்ளது.

இதை புதுவை மக்கள் உணரவேண்டும். கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த ரங்கசாமி நிதியை ஊதாரித்தனமாக செலவு செய்தார். தனது தொகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களை அரசு பணிகளில் கொல்லைப்புறமாக திணித்தார். ஒவ்வொரு அரசு துறையிலும் நிதியை மாற்றிமாற்றி தனது சுயநலத்திற்காக பயன்படுத்தினார்.

அரசு ஊழியர்களின் வைப்புநிதி, சேமநல நிதி, ஓய்வூதிய பலன் ஆகியவற்றை எடுத்து சூறைவிட்டார். அரசு ஊழியர்களின் வைப்புநிதியை எடுத்து அவர்களுக்கு சம்பளமாக கொடுத்தார். அரசு ஊழியர்களின் ரத்தத்தை உறிஞ்சி மீண்டும் அவர்களுக்கு ரத்ததானம் செய்தார்.

மத்திய அரசால் கொல்லைப்புறமாக நியமிக்கப்பட்ட கவர்னரின் நெருக்கடிகளையும் சமாளிக்க வேண்டிய நிலையில் நமது கூட்டணி அரசு உள்ளது. இலவச பொருட்கள் தரவும் தொல்லைதரும் வகையில் கவர்னர் செயல்படுகிறார்.

இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. பேசினார்.

Next Story