பிரதமர் மோடி, அமித்ஷாவின் ஆட்டம் கர்நாடகத்தில் எடுபடாது சித்தராமையா பேட்டி


பிரதமர் மோடி, அமித்ஷாவின் ஆட்டம் கர்நாடகத்தில் எடுபடாது சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 17 Jan 2018 3:00 AM IST (Updated: 17 Jan 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி, அமித்ஷாவின் ஆட்டம் கர்நாடகத்தில் எடுபடாது என்று சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

பிரதமர் மோடி, அமித்ஷாவின் ஆட்டம் கர்நாடகத்தில் எடுபடாது என்று சித்தராமையா கூறினார்.

ஆலோசனை கூட்டம்

கர்நாடக காங்கிரசில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் ஆலோசனை கூட்டம் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், முதல்-மந்திரி சித்தராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் சித்தராமையா பேசியதாவது:-

கர்நாடக காங்கிரசில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகு முதல் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி, மாநில தலைவர் பரமேஸ்வருக்கு பெரிய குழுவை கொடுத்துள்ளது. புதிய அதிகாரிகளுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். இன்னும் 3 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் இது முக்கியமான கூட்டம்.

அரசின் சாதனைகளை...

நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் மிக அதிகம். ஒவ்வொரு நிர்வாகியும் ஒரு சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற வேண்டும். அரசின் சாதனைகளை மக்களுக்கு தெரிவிக்கும் பணியை தொடங்கியுள்ளோம். கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி முதல் ஜனவரி 12-ந் தேதி வரை ஒரு மாதம் மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்து அரசின் சாதனைகளை மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளேன்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அந்த தேர்தலில் தோல்வி அடைந்த வேட்பாளர்களுடன் நான் கலந்து ஆலோசனை நடத்தினேன். 90 சதவீத பூத்துகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தலில் பூத் கமிட்டிகளின் பங்கு மிக முக்கியமானது. நமது அரசின் சாதனைகளை ஒவ்வொரு வாக்காளருக்கும் தெரிவிக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியல்

நாம் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளோம். பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் வாக்காளர் பட்டியல் இருக்க வேண்டும். அந்த பட்டியலில் வெளியாட்களின் பெயர்கள் இருந்தால் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது கட்சியினரின் பெயர்கள் விடுபட்டு இருந்தால் அதை சேர்க்க வேண்டும்.

கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெறும் நேரத்தில் நாட்டில் வேறு எங்கும் தேர்தல் கிடையாது. அதனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இங்கு வந்து இறங்குவார்கள். நாம் தீவிரமாக கட்சி பணியாற்ற வேண்டும். மத்திய பா.ஜனதா அரசு ஒன்றும் செய்யவில்லை. அதை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

கர்நாடகத்தில் எடுபடாது

முன்னதாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த சித்தராமையா, “கன்னடர்கள் பற்றி கோவா மந்திரி வினோத் பாலேகர் பயன்படுத்திய வார்த்தை அவருடைய கலாசாரத்தை காட்டுகிறது. அவருடைய கருத்து பொறுப்பற்ற, சிறுபிள்ளைத்தனமானது. நாங்கள் அதே போன்ற வார்த்தைகளை பயன்படுத்த விரும்பவில்லை. மகதாயி பிரச்சினையில் அரசியல் நடத்துவது சரியல்ல. இந்துத்துவாவை பா.ஜனதா கையில் எடுக்கிறது. நாங்களும் இந்துக்களே. கர்நாடக பா.ஜனதாவினர் மோடி, அமித்ஷாவை நம்பி இருக்கிறார்கள். தேர்தலில் அவர்களின் ஆட்டம் கர்நாடகத்தில் எடுபடாது” என்றார்.

Next Story