விக்கிரவாண்டி அருகே வீடூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர், கலெக்டர் திறந்து வைத்தார்


விக்கிரவாண்டி அருகே வீடூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர், கலெக்டர் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 17 Jan 2018 9:30 PM GMT (Updated: 17 Jan 2018 9:25 PM GMT)

விக்கிரவாண்டி அருகே வீடூர் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீரை கலெக்டர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே வராகநதி, தொண்டியாறு ஒன்றுசேரும் இடத்தில் 1958-ம் ஆண்டு வீடூர் அணை கட்டப்பட்டது. வராகநதி, தொண்டியாறு முறையே, செஞ்சி தாலுகா பாக்கம் மலைத்தொடரில் இருந்தும், தொண்டூர் ஏரியில் இருந்தும் உற்பத்தியாகி வீடூர் அணையில் ஒன்றுசேர்ந்த பிறகு அணையில் இருந்து சங்கராபரணி ஆற்றின் வழியாக புதுச்சேரி அருகே வங்கக்கடலில் கலக்கிறது.

இந்த அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 32 அடியாகும். சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து வந்ததையடுத்து தற்போது அணையின் நீர்மட்டம் 27 அடியாக இருந்தது. இந்த அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 2,200 ஏக்கர் விவசாய நிலங்களும், புதுச்சேரியில் 1,000 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 3,200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இந்நிலையில் வீடூர் அணையில் ஒருபோக பாசனத்திற்கு ஏற்ப போதிய அளவு தண்ணீர் இருப்பதால் நேற்று காலை அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 40 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் கலந்துகொண்டு, அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.

அப்போது அணையின் ஷட்டர்கள் வழியாக சீறிப்பாய்ந்த தண்ணீர், பிரதான கால்வாயில் ஓடியது. அந்த தண்ணீரில் கலெக்டர் மற்றும் விவசாயிகள் மலர்தூவினார்கள். அதன் பின்னர் கலெக்டர் சுப்பிரமணியன், நிருபர்களிடம் கூறுகையில், வீடூர் அணையில் இருந்து தற்போது ஒருபோக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது அணையின் பிரதான கால்வாயில் சென்று அங்கிருந்து பிரிந்து 5 கிளை வாய்க்கால்களில் செல்லும்.

இதன் மூலம் வீடூர் கிராமம் மட்டுமின்றி வானூர் தாலுகா சிறுவை, பொம்பூர், கோரக்கேணி, பொன்னம்பூண்டி, ஐவேலி, நெமிலி பகுதிகளுக்குட்பட்ட 1,650 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது. தொடர்ந்து மே மாதம் 31-ந் தேதி வரை 135 நாட்களுக்கு அணையில் இருந்து மொத்தம் 169 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும் என்றார்.

Next Story