பாலைவனத்தில் படர்ந்த ‘பனி’!


பாலைவனத்தில் படர்ந்த ‘பனி’!
x
தினத்தந்தி 20 Jan 2018 1:30 PM IST (Updated: 20 Jan 2018 1:03 PM IST)
t-max-icont-min-icon

பாலைவனத்தில் பனியைப் பார்க்க முடியுமா? இதென்ன அபத்தமான கேள்வி என்கிறீர்களா? அந்த அதிசயம் நடந்திருக்கிறது.

உலகின் மிகவும் வெப்பம் மிகுந்த பாலைவனமான சகாராவில் பனி படர்ந்திருக்கிறது. 40 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக அப்பாலை நிலத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது.

அங்கு சுமார் 18 அங்குலம் அளவுக்கு பனிப்படலம் மூடி யிருப்பதாக புகைப்படக்காரர்கள் கூறுகின்றனர்.

அது தொடர்பான படங்களை வெளியிட்டிருக்கிற அவர்கள், வடஆப்பிரிக்காவின் அய்ன் செப்ரா நகரத்துக்கு அருகிலேயே இந்த அரிய காட்சி காணக்கிடைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

கடந்த 37 ஆண்டுகளாக தாங்கள் இதுபோன்ற பனிப் பொழிவைக் கண்டதில்லை எனக் கூறும் அப்பகுதி மக்கள், அதை மிகவும் குதூகலமாக கொண்டாடியுள்ளனர்.

கடந்த வாரத்தின் ஞாயிறு அதிகாலையில் பனிப்பொழிவு துவங்கியதாகக் கூறும் மக்கள், அது உடனடியாக மணல் மீது படிந்து உறையவும் தொடங்கியதாகக் கூறுகின்றனர்.

இந்தப் பனிப்பொழிவால் தாங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளானதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.

கடைசியாக கடந்த 1979-ம் ஆண்டு இதே பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதாகக் கூறும் மக்கள், சுமார் அரை மணி நேரம் தொடர்ந்து பனிப்பொழிவு நீடித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

அய்ன் செப்ரா பகுதி கடல்மட்டத்தில் இருந்து சுமார் ஆயிரம் மீட்டர்கள் உயரத்தில் உள்ளது.

இந்தப் பகுதி உள்ளடங்கிய சகாரா பாலைவனம், வடஆப்பிரிக்காவின் பெரும்பகுதியைச் சூழ்ந்துள்ளது.

தற்போது மிகவும் வறண்ட பகுதியாக காணப்படும் சகாரா பாலைவனம், அடுத்த 15 ஆயிரம் ஆண்டுகளில் பச்சைப்பசேல் பகுதியாக மாறும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளார்கள் என்பது கூடுதல் தகவல்.

Next Story