தகுதியற்ற நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதை தடுக்க தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வர உத்தரவிட வேண்டும், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு


தகுதியற்ற நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதை தடுக்க தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வர உத்தரவிட வேண்டும், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு
x
தினத்தந்தி 25 Jan 2018 4:00 AM IST (Updated: 25 Jan 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

தகுதியற்ற நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதை தடுக்க தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வர உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

மதுரை,

மதுரை எல்லீஸ்நகரைச் சேர்ந்த அபிமனி என்ற சந்திரசேகரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தற்போதைய சூழ்நிலையில் அரசியல் சரியான நிலையில் இல்லை. ஓட்டுக்கு பணம் வழங்குவது, குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு வாக்களிக்க வற்புறுத்துவது என தேர்தல் முறையாக நடப்பதில்லை. இதனால் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை. தகுதியற்ற நபர்கள் தேர்வு செய்யப்படுவதால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

எனவே வேட்புமனு தாக்கல் செய்பவர்களில் 10 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும். மற்றவர்களுக்கு அவர்கள் டெபாசிட் செய்த பணத்தை திருப்பி வழங்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களை ஊடகங்கள் மூலமாக அறிமுகம் செய்ய வேண்டும். வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.

இதனால் ஓட்டுக்கு பணம், அன்பளிப்புகள் வழங்கப்படுவதை தடுக்க முடியும். அரசே ஏற்பாடு செய்து வேட்பாளர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டி, அங்கே அவர்களது பிரசாரத்தை முன் வைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை முன்வைத்து உரிய நடவடிக்கை கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் கடந்த டிசம்பர் 15-ந்தேதி மனு அனுப்பினேன். இதுவரை எந்த பதிலும் இல்லை. இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வாக்கு சேகரிக்கும் மற்றும் வாக்களிக்கும் முறையில் மாற்றம் கொண்டு வந்தால் தகுதியான நபர்களை தேர்வு செய்ய வாய்ப்பு ஏற்படும். நாட்டின் வளர்ச்சிக்கும் உதவியாக அமையும்.

மேலும் வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும். மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சக செயலாளரும், இந்திய சட்ட ஆணைய தலைவரும் வாக்களிக்கும் முறையை மாற்றுவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். இந்த மாற்றத்தை கொண்டு வருவது குறித்து குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், இந்த வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Next Story