காணாமல்போன நிலா


காணாமல்போன நிலா
x
தினத்தந்தி 28 Jan 2018 1:06 PM IST (Updated: 28 Jan 2018 1:06 PM IST)
t-max-icont-min-icon

தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அருணுக்கும், பூர்ணிமாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.

முன்கதை சுருக்கம்:

னியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அருணுக்கும், பூர்ணிமாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இருவரும் திருமண வாழ்க்கையை தொடங்குவதற்காக அருண் புதிதாக கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வாடகை வீட்டை தேர்ந்தெடுக்கிறான். இருவரும் திருமணத்திற்காக சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கிறார்கள். திரு மணம் முடிந்து திரும்பி வரும்போது பூர்ணிமாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக வீட்டை அலங்கரிக்கும் பொறுப்பை தனது நண்பன் ரகுவிடம் அருண் ஒப்படைக்கிறான். அவனோ தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த வீட்டில் குடித்து கும்மாளம் அடிக்க, அருண் வீட்டை காலி செய்யும் நிலை ஏற்படுகிறது. ஓட்டலில் தங்கி இருந்து வேறு வீட்டை தேடிப்பிடிக்கும் அருணுக்கு மீண்டும் வீட்டு உரிமையாளர் மூலம் சிக்கல் ஏற்படுகிறது.

பெங்களூருலிருந்து, வீட்டுச் சொந்தக் காரர் தெளிவான குரலில் பேசினார்:

“ஆமாம், அவங்க குடுத்தாங்க ஒரு கணக்கு. அது எவ்வளவு உண்மை, எவ்வளவு பொய்னு யாருக்குத் தெரியும்..? நான் எங்கியோ பெங்களூருல உட்கார்ந்திருக்கேன். எண்பதாயிரம் செலவாச்சுன்னு பங்கு கேட்டா..? ஒரு லிப்ட்டை ரிப்பேர் பண்றதுக்கு எதுக்கு எண்பதாயிரம் செலவாகப்போவுது..? ஆறு மாசம் தண்ணி வாங்கினேன்றாங்க.. மூணு மாசம் எங்க வீடு பூட்டியே இருந்தது. அதுக்கெல்லாம் நான் எதுக்கு காசு தரணும்..? அவங்க கேக்கறதை கேக்கட்டும். எதுவும் நான் குடுக்கறதா இல்ல.. நீங்க பயப்படாதீங்க.. சென்னைக்கு வரும்போது நான் பேசிக்கறேன்..”

“சார், இதெல்லாம் நீங்க சொல்லவேயில்லையே சார்..?”

“தம்பி, உங்களுக்கு என்ன பிரச்சினை..? நீங்க முன்பணம் குடுத்திருக்கீங்க.. என் வீட்டுக்குள்ள உங்களை விடமாட்டேன்னு யாராவது சொன்னாங்கன்னா, சொல்லுங்க.. நான் போலீஸோட வந்து பேசறேன்..”

அருண் போனை கட் செய்தான்.

“சார், இது, நீங்க அவரோட தீர்த்துக்க வேண்டிய விஷயம்..” என்றான் அருண், அசோசியேஷன் செயலாளரிடம், வருத்தத்துடன்.

“ரைட்டு தம்பி.. அசோசியேஷன் அதைப் பார்த்துக்கும்.. ஆனா, எப்போ லிப்ட் ரிப்பேருக்கு அவர் பணம் தரலையோ, அந்த லிப்ட்டை நீங்க பயன் படுத்தக் கூடாது தம்பி..! ப்ரிட்ஜ் எல்லாம் வந்து இறங்கியிருக்கு.. லிப்ட்டுல எடுத்துட்டு போயிடலாம்னு ஆசைப்படுவீங்க.. அது கூடாது. லிப்ட்டைப் பயன்படுத்தறதா இருந்தா, அதுக்கான பணத்தை நீங்க கட்டிட்டு, வாடகைல கழிச்சுக்குங்க..”

அருண், பூர்ணிமாவைத் திரும்பிப் பார்த்தான்.

“என் ராசி..” என்றாள் அவள், கண்கலங்கி.

அந்த ரீதியில் அவள் மேற்கொண்டு பேசக் கூடாது என்பதற்காக, “சார், அப்போ மாசாமாசம் குடுக்கவேண்டிய மெயின்டெனன்ஸ் பணம் நாங்க குடுக்க வேண்டாமா..?” என்றான் அருண், சூடாக.

“தம்பி, மெயின்டெனன்ஸ் குடுக்கறது பொதுவுல இருக்கற பல செலவுக்கு. மோட்டர் போட்டு தண்ணி ஏத்தறோம், வாட்ச்மேன் போட்டு சம்பளம் குடுக்கறோம்.. படியும் வாசலும் சுத்தம் பண்ண வேலைக்காரம்மா இருக்காங்க, அவங் களுக்குக் குடுக்கறோம்.. தண்ணி வேணாம், கரன்ட்டு வேணாம், மாடிப்படியைப் பயன்படுத்த மாட்டோம்னு சொல்லுங்க.. மெயின்டெனன்ஸ் தரவேணாம்.. யோசிச்சு முடிவெடுங்க..” என்று சொல்லிவிட்டு, அவர் திரும்பி நடந்தார்.

“சார், லிப்ட் இல்லாம இத்தினி பாரத்தையும் எப்படி தூக்கிட்டுப் படியேற சொல்றீங்க..? பேசினதுக்கு மேல ஆயிரம் ரூபா ஆகும் சார்..” என்றார் வேன் ஓட்டுநர்.

அருண் ஏதோ சொல்ல வாய்திறந்தபோது, பூர்ணிமா அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.

“கண்டவனுக்கெல்லாம் தண்டம் அழறோம். உழைக்கறவங்களுக்குக் கூலி குடுக்க ஏன் கூச்சப்படணும்..? பேரம் பேசாத.. இந்தாங்க, நீங்க கேட்ட பணம் தரோம்.. படியேத்தி எடுத்துட்டு வாங்க..” என்றாள்.

* * *

இரவு.

மெத்தையில்லாத கட்டிலின் மரச் சட்டத்தின் மீது அமர்ந்திருந்தான் அருண். பூர்ணிமா, அவன் மடியில் தலைவைத்து ஒருக்களித்துப் படுத்திருந்தாள்.

திடீரென்று அருண் பொங்கி அழ ஆரம்பித்தான். பூர்ணிமா திடுக்கிட்டு எழுந்தாள்.

“பூர்ணிமா, என்னை மன்னிச்சிருடா.. நான் உனக்கு ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்.”

“ஏய், என்ன ஆச்சு..?”

“கல்யாணம் ஆகி வந்தவுடனே, கழுத்து நகையைப் பிடுங்கிட்டேன். நமக்குன்னு ஒரு வீடு இல்லாம நடுத் தெருவுல உன்னை நிக்க வெச்சிட்டேன். இந்த விஷயத்துல கொஞ்சம்கூட அனுபவமே இல்லாம, தப்புத் தப்பா வீடு பிடிக்கறேன். கொடுத்த முன் பணம் கரையற வரைக்கும்தான் இந்த வீட்டுல இருக்கப்போறோம் பூர்ணா. அதுக்குள்ள நான் வேற வீடு உனக்குப் பார்த்துடறேன்..”

“ஏய், சும்மா புலம்பிட்டு இருக்காதே..! என்னைப் பிரிச்சிப் பேசாத.. எதுவா இருந்தாலும் சேர்ந்து சமாளிப்போம்..” என்றவள், சிறு இடைவெளி கொடுத்துச் சொன்னாள்: “நான் ஒரு முடிவு பண்ணிட்டேன் அருண்.”

“என்ன..?”

“அவசரப்பட்டு வேலையைவிட்டது தப்பு.. நான் திரும்ப வேலைக்குப் போறதுன்னு முடிவு பண்ணிட்டேன். உடனே அதுக்கு ஏதாவது மறுப்பு சொல்லி, மன்னிப்பு கேட்டு, உணர்ச்சிவசப் படாதே.. படிச்சிட்டு வேலைக்குப் போகாம, ஒரு பொம்பளை உட்கார்ந்திருக்கறதுதான் தப்பு. அவ குடும்பத்துக்காக சம்பாதிச்சுக் குடுக்கறது தப்பில்ல..!”

“சாரிடா பூர்ணிமா..”

“நமக்காக இன்னொரு தீர்மானமும் எடுத்துட்டேன் அருண்..”

“என்ன..?”

“அடுத்த வருஷம் இதே தேதிக்குள்ள நாம சொந்த வீடு கட்டி, குடி போறோம்..”

அருண் கண்களைப் புறங்கையால் துடைத்துக்கொண்டான்.

“என்ன பூர்ணிமா சொல்றே..?”

“எல்லா சாதனையுமே ஒரு கனவுலதான் ஆரம்பிக்குது, அருண். என்னுடைய கனவு சொந்த வீடு. ஒரு வருஷத்துக்குள்ள நாம அதை சாதிச்சுக் காட்டுவோம். முனைஞ்சா, முடியாதது இல்ல அருண். பழைய கம்பெனியிலேயே கேட்டா எனக்குக் கண்டிப்பா வேலை கிடைக்கும். என்ன, வாரத்துக்கு ரெண்டு நாள் மட்டும் நைட் ஷிப்ட் வரேன். மிச்ச நாள் கொஞ்சம் பகல்ல குடுங்கன்னு கேட்டுப் பார்க்கறேன்..”

மறுத்துப் பேச வாயெடுத்தாலும், அதுதான் சரியான முடிவு என்று அருணுக்கும் புரிந்திருந்தது.

“இது எல்லாத்துக்கும் காரணம் அந்த ரகுநாதன்..! அவன் மட்டும் என் கையில கிடைக்கட்டும். ரெண்டா கிழிச்சுப் போட்டுடுவேன்..”

“அவனைத் திட்டாதே.. அவன் இருந்த இடத்துல நானோ, நீயோ இருந்தாகூட, நண்பர்களை நம்பி சாவியைக் குடுத்திருப்போம்..” என்றாள் பூர்ணிமா.

தளரும்போது துணிவூட்டவும், முறுக்கும்போது தளர்த்திவிடவும் ஆணுக்கு ஒரு பெண் எவ்வளவு முக்கியம் என்று அருணுக்குப் புரிந்தது.

அவளை இழுத்து தன் மடியில் போட்டுக்கொண்டு சொன்னான்: “இன்னிலேர்ந்து, சொந்த வீடுங்கறது உன் கனவு மட்டுமில்ல, பூர்ணிமா.. நம்ப கனவு..”

* * *

மறுநாள் பைக்கை நிறுத்திவிட்டு, அலுவலகத்துக்குள் நுழைந்தபோது, முந்தின இரவு பூர்ணிமா சொன்னது அருணுக்கு நினைவுவந்தும், அதை ஒதுக்கினான்.

“என்ன அருண், கல்யாணமெல்லாம் நல்லா நடந்துச்சா..?” என்று குறுக்கிட்டவர்களிடமெல்லாம்..

“ம்.. நல்லா போச்சு சார்..” என்று உதடுகள் உணர்வில்லாமல் வார்த்தைகளை உதிர்த்தாலும், அருணுடைய விழிகள் ரகுநாதனைத்தான் தேடின. கடைசி மேஜையருகில் காசாளருடன் நின்று பேசிக்கொண்டிருந்த ரகுநாதன், அருணைப் பார்த்ததும் தலைகுனிந்தான்.

அருண், அந்த ஹாலின் குறுக்கே ஓடி, ரகுநாதனின் சட்டையைக் கொத்தாகப் பற்றி அப்படியே பின்னால் தள்ளிக்கொண்டு போய், சுவரோடு மோதினான்.

சுற்றியிருந்தவர்கள் அதிர்ந்து பார்த்தனர்.

வலிக்கும் பின்மண்டையைத் தடவிக்கொண்டே, “சாரிடா அருண். நான் பண்ணுனது தப்புதான். மன்னிச்சுடு..” என்று ரகுநாதன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அருணின் முஷ்டி பறந்துவந்து அவன் கன்னத்தில் தாக்கியது.

ரகுநாதன் தடுமாறி, தன்னை நிலைப்படுத்திக்கொள்ள அங்கிருந்த மேஜை விளக்கைப் பிடிக்க, அது எகிறி, அவனோடு கீழே விழுந்து நொறுங்கியது.

அடுத்த அடி அடிப்பதற்குக் கையை ஓங்கிய அருண், அப்படியே நிறுத்தினான்.

‘அய்யோ, இந்தக் கண்ணாடிக்கு வேறு காசு கொடுக்க வேண்டுமா..?’

ரகுநாதனின் உதடு கிழிந்து ரத்தம் வழிந்தது. அலுவலகத் தோழர்கள் குறுக்கில் புகுந்து, அருணை ஓரமாக இழுத்தார்கள்.

“என்ன நடக்குது இங்கே..?” என்று கேட்டுக்கொண்டே வந்த மேலாளர், ரகுநாதனின் ரத்தத்தைப் பார்த்ததும் பதறினார்.

“அருண், என்ன இது, நட்டநடு ஆபீஸ்ல..? பர்சனலா பிரச்சினை இருந்தா, வெளில வெச்சுக்க.. ஆபீசுக்குள்ள அடிதடி நடந்தா, மெமோ இஷ்யூ பண்ண வேண்டிவரும்..” என்றார் மேலாளர், ரகுநாதனுக்கு கைகொடுத்து எழுப்பிக்கொண்டே.

ரகுநாதனை மீண்டும் தாக்க வேண்டும் என்று எழுந்த ஆவேசத்தை அருண் கட்டுப்படுத்திக்கொண்டான். வேலையிலிருந்து தற்காலிக நீக்கத்தை எதிர்கொள்ள இப்போது இயலாது என்று அவனுக்குத் தெளிவாகப் புரிந்திருந்தது.

ரகுநாதன் ரத்தத்தைத் துடைத்துக்கொண்டு மறுபடியும், “சாரிடா, அருண்..” என்றான். அருணைத் தோளில் தட்டி சமாதானப்படுத்த முனைந்தான்.

அருண் அந்தக் கையைக் கோபமாகத் தள்ளினான்.

“ச்சீ.. இனிமே என் மூஞ்சியிலயே முழிக்காதடா..!” என்று சொல்லிவிட்டு, தன்னுடைய மேஜைக்கு வேகமாக நடந்தான்.

-தொடரும்

Next Story