கூட்டு விவசாயத்தில் வருமானம் ஈட்டும் பெண்கள்


கூட்டு விவசாயத்தில் வருமானம் ஈட்டும் பெண்கள்
x
தினத்தந்தி 28 Jan 2018 1:29 PM IST (Updated: 28 Jan 2018 1:29 PM IST)
t-max-icont-min-icon

கிராம பெண்கள் ஒன்று சேர்ந்து கூட்டு விவசாயத்தில் ஈடுபட்டு லாபம் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள்.

கிராம பெண்கள் ஒன்று சேர்ந்து கூட்டு விவசாயத்தில் ஈடுபட்டு லாபம் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள். குடும்ப தலைவிகளாக வீட்டுக்குள் அடைபட்டு கிடந்தவர்கள் விவசாயத்தை கையில் எடுத்திருப்பதற்கு கணவர்மார்களின் கடன் பிரச்சினையே காரணம். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி அருகில் இருக்கிறது கவுரா கிராமம். ஏழ்மையான பின்னணியை கொண்ட இந்த கிராமத்தில் வசிப்பவர்களுக்கு விவசாயம்தான் வாழ்வாதாரம்.

அதில் போதிய வருமானம் இல்லாமல் போனதால் குடும்ப செலவுகளை சமாளிக்க கந்துவட்டிக்கு கடன் வாங்கி இருக்கிறார்கள். அதனை திருப்பி செலுத்த வருமானம் இல்லாததால் வேலை தேடி நகர்பகுதிகளுக்கு படையெடுத் திருக்கிறார்கள். இதையடுத்து கிராமத்தில் உள்ள பெண்கள் ஒன்று சேர்ந்து வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவது பற்றி ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். இறுதியாக நிதி திரட்டி ஏதாவதொரு சுயதொழில் தொடங்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். எதிர்பார்த்தபடி நிதி திரட்டுவதிலும் சிரமத்தை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

‘‘குடும்ப செலவுகளை சமாளிப்பதற்கே சிரமப்பட்டதால் அதிக அளவில் பணம் திரட்டமுடியவில்லை. ஒவ்வொருவரிடமும் 20 ரூபாய் வசூலித்தோம். அதுவே எங்கள் தகுதிக்கு அதிகமாகத்தான் இருந்தது. வசூலித்த பணத்தில் விவசாயம் செய்வதற்கு முடிவு செய்தோம். கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் நிலத்தை குத்தகைக்கு வாங்கி பூக்கள், காய்கறிகளை விளைவித்தோம். 15 பெண்கள் ஒன்றிணைந்து குழு ஒன்றை உருவாக்கி விவசாய வேலைகளை பகிர்ந்து கொண்டோம். கூட்டு முயற்சியால் விவசாய செலவுகள் குறைந்தது. எங்கள் கடின உழைப்பிற்கு பலனாக நல்ல விளைச்சல் கிடைத்தது. அந்த பணத்தை கொண்டு கணவர்மார்கள் வாங்கியிருந்த கடனை திருப்பி செலுத்த தொடங்கினோம்’’ என்கிறார், குழுவின் தலைவரான சாந்தா மவுரியா.

சுழற்சி முறையில் பூக்கள், காய்கறிகளை சாகுபடி செய்து கடன் முழுவதையும் முடித்திருக் கிறார்கள். இதையடுத்து வேலை தேடி நகர்பகுதி களுக்கு இடம் பெயர்ந்த கணவர்மார்கள் ஊருக்கு திரும்பி வந்திருக்கிறார்கள். கூட்டு முயற்சியே விவசாயத்தை லாபகரமானதாக மாற்றியிருப்பதை உணர்ந்த மற்ற பெண்களும் விவசாயத்தில் ஈடுபட தொடங்கி இருக்கிறார்கள். இப்போது கவுரா கிராமத்தில் 35 பெண் விவசாய குழுக்கள் இயங்கி கொண்டிருக்கின்றன. விவசாயம் மூலமே ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் வரை பணம் புழங்குகிறது. அதனால் கிராமத்தில் உள்ள பெண்கள் அனைவரும் மகிழ்ச்சியாக விவசாயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

‘‘குழுக்களாக ஒன்று சேர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டதும் பணம் புழங்க தொடங்கியது. இப்போது குழந்தைகளை ஒழுங்காக பள்ளிக்கு அனுப்புகிறோம். நல்ல உணவும், உடையும் கிடைக்கிறது. கந்துவட்டிக்காரர்களை தேடி செல்ல வேண்டிய அவசியமில்லை’’ என்கிறார்கள்.

அவசர தேவைகளுக்காக குழு மூலம் பணமும் வழங்குகிறார்கள். ‘‘யாருக்காவது அவசரமாக பணம் தேவைப்பட்டால் ரூ.1000 வரை வாங்கிக்கொள்ளலாம். இரண்டு சதவீதம் வட்டி வசூலிக்கிறோம். அதுவும் நிதி ஆதாரத்தை பெருக்குவதற்காகத்தான்’’ என்கிறார், சாந்தா மவுரியா.

இந்த கிராமம் கூட்டு விவசாயத்திற்கு முன் மாதிரியாக விளங்கி கொண்டிருக்கிறது.

Next Story