டிப்பர் லாரி, மோட்டார்சைக்கிள் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

சாந்திபுரம் அருகே மோட்டார்சைக்கிள், டிப்பர் லாரி நேருக்குநேர் மோதிக்கொண்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியானார்கள்.
ஸ்ரீகாளஹஸ்தி,
சித்தூர் மாவட்டம் கொத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மமதா. இவருடைய மகன் ராஜப்பா, மகள் யஷ்வந்திகா. ஒரே மோட்டார்சைக்கிளில் மமதா, ராஜப்பா, யஷ்வந்திகா ஆகியோர் உறவினர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர். கிராமத்துக்கு அருகே சென்றபோது, அந்த வழியாக எதிரே வந்த ஒரு தனியார் கல்குவாரிக்குச் சொந்தமான டிப்பர் லாரியும், அவர்கள் சென்ற மோட்டார்சைக்கிளும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தனர்.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும், அங்கிருந்த கிராம மக்கள் தனியார் கல்குவாரிக்குத் திரண்டு வந்து கற்களை எடுத்து சரமாரியாக வீசி குவாரி ஊழியர்கள் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் கல் குவாரிக்குத் தீ வைக்க முயன்றனர். இதனால், அங்குப் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும், சாந்திபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிராம மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் சமரசம் ஏற்பட்டதும், அனைவரும் கலைந்து சென்றனர்.
சோகம்இந்த விபத்தில் பலியான ஒதே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரின் பிணங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக போலீசார் குப்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி சாந்திபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.