பஸ் கட்டண உயர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி தி.மு.க.-கூட்டணி கட்சியினர் சாலை மறியல்


பஸ் கட்டண உயர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி தி.மு.க.-கூட்டணி கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 30 Jan 2018 3:45 AM IST (Updated: 30 Jan 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திண்டுக்கல் மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்,

தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு பஸ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது. இந்த கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் நேற்று தமிழகம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலும் அந்த கட்சிகளை சேர்ந்தவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திண்டுக்கல் பஸ் நிலையம் முன்பு திரண்டனர்.

இதையடுத்து தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் பசீர் அகமது தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க. நகர செயலாளர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் சொக்கலிங்கம், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் செல்வராகவன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சந்தானம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாண்டி, முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, மனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ஜமால் முகமது உள்பட கூட்டணி கட்சிகளை சேர்ந்த சுமார் 500 பேர் இந்த மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து நகர் வடக்கு போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

செம்பட்டியில், முன்னாள் அமைச்சரும், தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளருமான இ.பெரியசாமி எம்.எல்.ஏ. தலைமையில் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக சென்று, ரவுண்டானா அருகில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பஸ் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் மறியலில் ஈடுபட்ட 36 பெண்கள் உள்பட 388 பேரை செம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

பழனியில் கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., வாகைசந்திரசேகர் எம்.எல்.ஏ. தலைமையில் பஸ் நிலையம் அருகே மறியல் போராட்டம் நடந்தது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 11 பெண்கள் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர். வகைசந்திரசேகர் எம்.எல்.ஏ. கைது செய்யப்படவில்லை.

நத்தம் பஸ் நிலையம் அருகில் ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினகுமார் முன்னிலையில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட சுமார் 400-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். சாணார்பட்டி ஒன்றியத்தில் தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் விஜயன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ஒட்டன்சத்திரத்தில் தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. தலைமையில் கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 400 பேரை போலீசார் கைது செய்தனர். வேடசந்தூரில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் வீராசாமிநாதன், கவிதாபார்த்திபன் ஆகியோர் தலைமையில் கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட சுமார் 300 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொடைக்கானலில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பாக மூஞ்சிக்கல் பஸ் நிலைய பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தி.மு.க நகர செயலாளர் முகமது இபுராகிம், காங்கிரஸ் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல்கனிராஜா, ம.தி.மு.க. நகர செயலாளர் தாவூத் உள்பட 180 பேரை போலீசார் கைது செய்தனர்.

குஜிலியம்பாறையில், பஸ் நிலையம் முன்பு நடந்த போராட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் ராஜரத்தினம் தலைமையில் அந்த கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் ரெட்டியார்சத்திரத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சிவகுருசாமி, மணி ஆகியோர் தலைமையில் கூட்டணி கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 13 பெண்கள் உள்பட 465 பேர் கைது செய்யப்பட்டனர். நிலக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. மாநில குழு உறுப்பினர் அன்பழன் உள்பட காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 234 பேர் கைது செய்யப்பட்டனர்.

வடமதுரை அருகே திண்டுக்கல்- திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க நகர செயலாளர்கள் கணேசன், கருப்பன் உள்பட கூட்டணி கட்சிகளை சேர்ந்த 295 பேரை போலீசார் கைது செய்தனர். வத்தலக்குண்டு பஸ் நிலையம் முன்பு தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 215 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல மாவட்டம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 199 பெண்கள் உள்பட 3 ஆயிரத்து 708 பேரை போலீசார் கைது செய்தனர். 

Next Story