சாலைமறியல் போராட்டத்தில் தி.மு.க.வினர் கோஷ்டி மோதல்


சாலைமறியல் போராட்டத்தில் தி.மு.க.வினர் கோஷ்டி மோதல்
x
தினத்தந்தி 30 Jan 2018 4:30 AM IST (Updated: 30 Jan 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்தில் தி.மு.க.வினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் கீரனூர் முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கீரனூர்,

தமிழகம் முழுவதும் நேற்று தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் பல்வேறு இடங்களில் பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சாலைமறியல் போராட்டம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் தலைமையில், அக்கட்சியினர் சாலைமறியல் செய்வதற்காக கோஷங்களை எழுப்பியவாறு திருச்சி-புதுக்கோட்டை சாலையில் ஊர்வலமாக வந்து கொண்டிருந்தனர். இந்த ஊர்வலத்தில் கீரனூர் பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் வீரையாவும் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வீரையாவின் தரப்பினருக்கும், ஊர்வலத்தில் கலந்துகொண்ட தி.மு.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த சிலர் வீரையாவை தாக்கினர். இதனால் ஊர்வலத்தில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது.

இதுகுறித்து அறிந்த கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகுரு, போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் ராயப்பன் மற்றும் போலீசார் தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி ஏற்படுத்தினர். இதையடுத்து வீரையாவின் தரப்பினர் அங்கிருந்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து கீரனூர் 4 ரோடு பிரிவு சாலையில் அமர்ந்து பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் உள்பட 110 பேரை போலீசார் கைது செய்து, அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.


Next Story