அத்திக்கடவு-அவினாசி திட்டம் விரைவில் தொடங்கப்படும் முதல்-அமைச்சர் உறுதி அளித்ததாக போராட்டக்குழுவினர் தகவல்


அத்திக்கடவு-அவினாசி திட்டம் விரைவில் தொடங்கப்படும் முதல்-அமைச்சர் உறுதி அளித்ததாக போராட்டக்குழுவினர் தகவல்
x
தினத்தந்தி 31 Jan 2018 4:30 AM IST (Updated: 31 Jan 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

அத்திக்கடவு- அவினாசி திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் உறுதி அளித்ததாக போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.

அவினாசி,

கடந்த 50 ஆண்டு கோரிக்கையான அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி அத்திக்கடவு-அவினாசி திட்ட போராட்டக்குழுவினர் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ந்தேதி போராட்டக்குழுவினர் அவினாசி புதிய பஸ்நிலையத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த போராட்டத்தின் முடிவில் அத்திக்கடவு- அவினாசி திட்ட முதல்கட்ட பணிக்காக ரூ.3 கோடியே 27 லட்சம் ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டதால் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து மீண்டும் இத்திட்டத்திற்காக ரூ.250 கோடியை அரசு ஒதுக்கியது. இருப்பினும் அத்திக்கடவு திட்டத்திற்கான ஆரம்ப கட்ட பணி எதுவும் இதுவரை தொடங்காததால் போராட்டக்குழுவினர் மீண்டும் வருகிற 8-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

இதற்கிடையில் அத்திக்கடவு-அவினாசி திட்ட போராட்டக்குழுவினர் சென்னை சென்று தலைமை செயலகத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டவர்களை சந்தித்து அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகளை உடனடியாக தொடங்க வேண்டி வலியுறுத்தியுள்ளனர்.

அப்போது இத்திட்டத்திற்காக முழு தொகையையும் மத்திய அரசை எதிர்பார்க்காமல் மாநில அரசே மூன்று தவணைகளாக பிரித்து ஒதுக்கி பணியை முடிப்போம் என்றும் திட்டத்தை செயல்படுத்த அலுவலக ரீதியாக விரிவான திட்ட அறிக்கை பணி இன்னும் முடிவடையாததால் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றை விரைவில் சரி செய்து திட்டத்தை நீரேற்று (பம்பிங் திட்டம்) மூலம் செயல்படுத்தப்போவதாகவும், திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளதாக போராட்டக்குழுவினர் தெரிவித்தனர். 

Next Story