மணல் திருட்டால் கட்டாந்தரையான வைப்பாறு


மணல் திருட்டால் கட்டாந்தரையான வைப்பாறு
x
தினத்தந்தி 3 Feb 2018 3:00 AM IST (Updated: 2 Feb 2018 11:44 PM IST)
t-max-icont-min-icon

தொடர் மணல் திருட்டால் வைப்பாறு கட்டாந்தரையாகி விட்டது.

தாயில்பட்டி,

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் பயணித்து தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேம்பாற்றில் வைப்பாறு கலக்கிறது. இதன் குறுக்கே இருக்கன்குடி அணையும் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட வெம்பக்கோட்டை அணையும் உள்ளன. மேலும் 10-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளும் உள்ளன. ஆங்காங்கே உள்ள ஓடைகள் மற்றும் கண்மாய்கள் நிரம்பி உபரிநீர் இந்த ஆற்றில்தான் சங்கமிக்கும்.

ராமநாதபுரம் மன்னர் இந்த ஆற்றில் 8 கோணம் கொண்ட சந்தியா கல் மண்டபம் கட்டித்தந்துள்ளார். எப்போதும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த காலத்தில் மூதாதையருக்கு இங்குதான் தர்ப்பணம் கொடுத்துள்ளனர். முப்போகம் விளைந்து 2 ஆயிரம் டன் வரை நெல் விளைவித்த பகுதி இதுவாகும்.

கோட்டைப்பட்டி, எறவார்பட்டி, சேதுராமலிங்காபுரம், படந்தால் உள்ளிட்ட பகுதியில் உறைகிணறு தோண்டி அதில் குளித்து மகிழ்ந்துள்ளனர். கைகளால் குழிதோண்டி தெளிந்த நீரை குடங்களில் எடுத்து வீடுகளில் பயன்படுத்திய காலமும் இருந்துள்ளது.

இதுமட்டுமின்றி வைகை, காவிரிக்கு இணையான மணல் வளம் கொண்ட ஆறு இதுவாகும். எப்போதும் 10 அடிக்கு மணல் இருந்து அதில் சிற்பிகள் விளைந்து அதனை விற்று பலர் வருமானம் ஈட்டியுள்ளனர். பவுர்ணமி தினத்தில் குடும்பம் குடும்பமாக வந்து நிலாச்சோறு சாப்பிட்டு மகிழ்ந்ததோடு நடைபயிலும் குழந்தைகளை மணலில் நடக்கவிட்டு பயிற்சி தந்துள்ளனர். தற்போதும் சாத்தூர் படந்தாலில் காணும்பொங்கல் கொண்டாட்டம் இந்த ஆற்றில்தான் நடக்கிறது.

இத்தகைய சிறப்புமிக்க இந்த ஆற்றில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மணல்குவாரி அமைக்கப்பட்டு மணல் எடுத்து விற்பனை செய்து வந்தனர். அதன்பின்னர் குவாரி மூடப்பட்டு விட்டாலும் மணல் அள்ளுவது நிறுத்தப்படவில்லை.

இரவும் பகலும் ஜே.சி.பி. எந்திரத்தின் உதவியுடன் மணலை அள்ளி லாரி, டிராக்டரில் கொண்டு சென்று மாவட்டத்தின் பல இடங்களிலும் விற்பனை செய்கின்றனர். இதனால் வைப்பாற்றின் பெரும்பகுதி கட்டாந்தரையாக பொட்டல்காடாக மாறிவிட்டது. அரசு குவாரி மூடப்பட்ட பின்னர் ஆற்றுக்குள் வாகனங்கள் இறங்க முடியாத அளவுக்கு இரு கரை ஓரமும் சுமார் 2 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது. ஆனால் அதையெல்லாம் மூடி மணல் திருட்டு ஜோராக நடக்கிறது.

வெம்பக்கோட்டை போலீசாரும் சாத்தூர் பகுதி போலீசாரும் தீவிர தணிக்கை செய்தும் மாதந்தோறும் 30-க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்து பலரை கைது செய்தும் இதனை கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது நிலவும் மணல் தட்டுப்பாட்டை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மணல் திருட்டில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். இதனை கட்டுப்படுத்த முடியாமல் வருவாய்த்துறையினரும் போலீசாரும் திணறி வருகின்றனர்.

ஆறு வறண்டுபோனதுடன் மழையும் இல்லாததால் விவசாயிகள் கூலி வேலைக்கு செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். ஆற்றுப்பகுதியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும், வெம்பக்கோட்டை அணையை தூர்வார வேண்டும், இடது வலது கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அத்தோடு மணல் திருட்டை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். 

Next Story